தமிழ் நாகரிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் நாகரிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மே, 2013

கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.)


கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.


பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?

கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமய நூல்களும் கிரந்த எழுத்தும்
கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.
சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?
உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?
தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?
கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?
தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.
மனமார்ந்த நன்றிக்குரியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
 
 



சனி, 1 செப்டம்பர், 2012

உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை

இலண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் என்ற இதழில் 03–07–2012 ஆம் நாளிட்டு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

Question: What is the world’s oldest language still spoken today? – C.Mayo, Rotherham. 


Answer:  A recent archealogical evidence suggests that Tamil spoken in the Indian Sub-continent could have been the language used by the Indus civilization and even the Sumerians. References to rivers that dried up 10,000 years ago are seen in Tamil literature. In fact, there is a possibility that Tamil was the root of Sanskrit, in turn the root of all Indo-European language. -Flora Pulman Ivy Bridge, Devon

தமிழ் மொழிபெயர்ப்பு: 


கேள்வி: எது இன்றும் பேசப்பட்டு வருகிற உலகின் தொன்மையான மொழி?

பதில்: அண்மையில் வெளிவந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி சான்றுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றும் பேசப்பட்டு வருகிற தமிழ்மொழியே உலகின் தொன்மையான மொழி எனலாம். இம்மொழி சிந்துவெளி நாகரிக மக்கள், மற்றும் சுமேரியர்கள் ஆகியோரால் பேசப்பட்ட மொழி. தமிழ் இலக்கியங்களில் 10,000 வருடங்களுக்கு முன்னரே ஓடிக் காய்ந்து போன நதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உண்மையில் தமிழே சமஸ்கிருத மொழிக்கு வேரான மொழியாக இருந்திருக்கும் என்பதற்கும் வாய்ப்புகள் பல உள்ளன.

நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வது மட்டும் போதாது. தமிழனாக வாழ்வோம். தமிழுக்காக வாழ்வோம்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

முற்காலத் தமிழ் நாகரிகம்



திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு ,சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த நிலப்பகுதி சமச்சீரான வெப்பம்; அரிதாகத்தான் மழை பெய்கிறது. எனவே தாமிரபரணி ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. தாவரங்கள் உயிர்த்தெழுந்ததும் கானமயில்களின் உற்சாக நடனம் தவறாமல் காணக்கிடைக்கும். இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள், மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் ஆதிச்ச நல்லூர் தான் என்பதை உறுதி செய்கின்றன.
விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்டுள்ள அகழாய்வில் சென்ற வருடம் 600 சதுர கி.மீ. பரப்பில் மட்டும் 160க்கும் மேலான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் எலும்புக்கூடுகள், உடையாத நல்ல முறையில் உள்ள மட்பாண்டங்கள், பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடிவான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய ஜாடிகள், மிகுதியான அளவில் மாவரைக்கும் கல், கழுத்தணிகள், கடகம், காப்புகள், வளையல்கள், மோதிரம், மகுடங்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இங்கு கிடைக்கும் தடயங்களை முன் வைத்து நம் முன்னோர்களின் கலாசாரத்தையும் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்” என்கிறார் இந்த அகழாய்வை மேற்கொண்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி.
உலகில் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தொடரும் மனித வரலாற்றை அறிவதற்கு, உலகம் முழுக்க அறிஞர்கள் பெரிதும் தொல்லியல் துறையைத் தான் சார்ந்திருக்கிறார்கள். இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள மனித வரலாறு, மனிதன் தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இருந்துதான் தொடங்குகிறது. மனிதன் தோன்றியது முதல், இலக்கியங்கள் படைக்கப்பட்டது வரையிலான இடைப்பட்ட கால கட்டத்தில் அவனது நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள, அவன் விட்டுச் சென்றுள்ள தொல்பொருள்கள் தான் இன்று நமக்கு முக்கிய ஆவணங்கள். அத்தகைய தொல்பொருட்கள் உலகின் பல்வேறு இடங்களில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிதான் அகழாய்வு.
”தமிழ்நாடு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும் தமிழகம் தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும் இப்போது ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு. 1000 வரைக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் மிகவும் முற்கால நாகரிகம் என்பதுடன் மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழகமும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் இப்போது ஆதிச்சநல்லூர் அகழாய்வை முக்கியத்துவம் உடைய தாக்குகிறது” என்கிறார் சத்தியமூர்த்தி.
முதலில் ஜெர்மானியர்கள்தான் ஆதிச்சநல்லூரில் வந்து ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். இனங்களின் வேர்களைக் கண்டறிவதுதான் அவர்களின் அக்கறை. அவர்கள் 25-30 எலும்புக் கூடுகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அறிக்கை எதுவும் தரவில்லை. எனவே அவர்களது ஆய்வு முடிவுகள் என்ன என்பது நமக்குத் தெரியாமலே போய்விட்டது. அப்புறம் ஆங்கிலேயர்கள் இந்தியப் பண்பாட்டின் தொன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். எனவே இந்தியா முழுவதும் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தொன்மை எச்சங்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை பல்லாவரத்தில் 1863 – ஆம் ஆண்டு நிலப்பொதியியல் அலுவலரான இராபர்ட் புரூஸ் புட் என்னும் அறிஞர் பழங்கற்கால கோடாரி ஒன்றைக் கண்டு பிடித்தார். மேலும் அத்திரம்பாக்கத்தில் உடைந்த புதை வடிவ மனிதக் கால் எலும்பு ஒன்றையும் கண்டுபிடித்தார். இராபர்ட் புரூஸ்தான் தமிழ்நாடு, கற்கால மனிதன் வாழ்ந்த பல தொன்மையான இடங்களைக் கொண்டுள்ளது என முதன் முதலில் உலகுக்கு உணர்த்தினவர். இதற்கு முன்னரே பிறிக்ஸ் என்பவர் நீலகிரிப் பகுதிகளில் 1837 – ஆம் ஆண்டளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பலவற்றை அகழ்ந்து அங்கு வாழும் பழங்குடி மக்களுக்கும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களுக்கும் இருக்கும் தொடர்பினை ஆய்வு செய்திருந்தார். இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளும் அகழாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இக்கால கட்ட ஆய்வுகள் பற்றி, ”அறிவியல் சார்ந்த அகழாய்வுகளோ, காலக் கணிப்பு முறைகளோ அக்கால கட்ட ஆய்வுகளில் பின்பற்றப்படவில்லை. எனவே அகழாய்வு செய்யப்பட்ட பல்வேறு இடங்களில் நிலவிய பண்பாட்டின் தாக்கத்தையும் காலத்தையும் இன்று நம்மால் சரியாக அறிய முடியவில்லை” என்கிறார் சத்தியமூர்த்தி.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் சர் மார்டிமர் வீலர் என்பவர் அறிவியல் சார்ந்த அகழாய்வு முறைகளை இந்தியத் தொல்லியல் துறையில் புகுத்தினார். சர் மார்டிமர் வீலர் கால கட்டத்தில்தான் தட்சசீலம், ஹராப்பா, தமிழ்நாட்டில் அரிக்கமேடு அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அரிக்கமேடு அகழாய்வு, வீலரின் மிகச் சிறந்த ஆய்வாக தொல்லியலாளர்களால் கருதப்படுகிறது. அரிக்கமேடு அகழாய்வு மூலம்தான் தமிழ்நாடு, உரோமாப்புரி நாட்டுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு அறியப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்விடப் பகுதிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ மேற்கொண்ட அகழாய்வுகள் மிகச் சிறந்த பண்பாட்டினை தமிழகம் கொண்டிருந்திருக்கிறது என்று வெளிஉலகுக்கு தெரியப்படுத்தின. அலெக்சாண்டர் ரீயின் முக்கிய இரண்டு அகழாய்வுகள் ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும்பேர் ஆய்வுகள். இவரது ஆய்வில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் இங்கு தொன்மையான நாகரிகம் ஒன்றிருந்ததை உறுதிப்படுத்தின. இவர் சேகரித்த வெண்கலப் பொருட்கள், சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த தாய் தெய்வ அமைப்புடைய வெண்கலத் திருவுருவம் போன்றவை. ”ஆதிச்சநல்லூர் ஊரிருக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆதிச்ச நல்லூருக்கு அருகில் உள்ள கொற்கையின் பண்பாட்டுக் காலத்துக்கும் முற்பட்டதாக இது இருக்க வேண்டும். கரிமம் 14 முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட கொற்கையின் காலம் கி.மு. 785. கொற்கையிலிருந்து வடக்காக ஒன்பது கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. எனவே முற்காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இருந்து, கடல் பின்னோக்கிச் சென்ற பின் தனது சிறப்பை இவ்வூர் இழந்திருக்க வேண்டும்” என்கிற முடிவுக்கு அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வுகள் வந்தன.
அலெக்ஸாண்டர் ரீக்கு முன்பே டாக்டர் ஜாகோர் என்ற பெர்லின் அருங்காட்சியக ஆய்வாளர் 1876 – ஆம் ஆண்டு தொடங்கி, தாமிரபரணியின் தென்பகுதியில் சுமார் 114 ஏக்கர் பரப்பளவு பரந்து காணப்படும் ஏரலில் ஆய்வுகள் செய்தார். இவர்தான் முதன் முதலில் ஆதிச்சநல்லூரை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர். இவருக்கு சில தாழிகள் கிடைத்தன. மேலும் மட்பாண்டங்கள், இரும்புபொருட்கள், எலும்புக் கூடுகளின் பகுதிகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் ஜாகோர் சேகரித்தார். ஆனால் அவற்றை அப்போது அவர் வெளியிடவில்லை. இப்போது அவரது சேகரிப்புகள் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜாகோரைத் தொடர்ந்து பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.லோனிசு லாபிக்கு 1903-04 ஆண்டுகளில் பல மட்கல வகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றை ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தார்.
அதன்பிறகு அலெக்ஸாண்டர் ரீ ஆய்வுகள் மேற்கொண்டார். சங்க இலக்கியங்களின் கால கட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களைத் தேடுவதுதான் ரீயினுடைய நோக்கம். அவருக்கு நிறையப் பொருட்கள் கிடைத்தன. ஜாகோரைவிட அதிக தாழிகளை இவர் கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 1872க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இவரது சேகரிப்பில் தங்கம் மற்றும் வெண்கல கலைப்பொருட்கள் மூடியுடன் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கல எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான், சேவல், புலி, யானை முதலியவையும் உள்ளன. மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பாகங்களாகவும் கிடைத்தன. விலங்கு உருவங்கள், இரும்புப் பொருட்கள், எண்ணற்ற பானை ஓடுகள் என்று அகழாய்வில் கிடைத்த அனைத்தையும் அலெக்சாண்டர் ரீ அட்டவணைப்படுத்தி பதிப்பித்தார். அவரது அறிக்கை, கீழ்த் தாமிரபரணிச் சமவெளியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பொதுவான தகவல்களைத் தருகின்றன. ”ஆனால் இவரது சேகரிப்பைக் கொண்டு அக்கால சமூகப் பொருளாதாரச் சூழலை வெளிக்கொணர்வது கடினம். விஞ்ஞானப் பூர்வமான தொல்லியல் அணுகுமுறையுடன் ஆய்வுகள் செய்யப்படாதது இவர் ஆய்வின் முக்கியக் குறை . அவரால் கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்த முடியவில்லை. அது அவருடைய குறை இல்லை. அக்காலகட்டத்தின் தொல்லியல் துறையின் சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. இப்போது நிறைய விஞ்ஞான முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவேதான் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இவ்வளவு தூரம் நாம் முன்னேறி வந்துள்ளோம்” என்கிறார் சத்தியமூர்த்தி.
மேலும், ”இந்த ஆய்வு மூலம் சங்ககாலத்துக்கு நம்மால் தேதி குறித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதை குழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்க முறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன என்கிறார் அவர்.
இப்போது மேல்நிலை, இடைநிலை, கீழே என்று மூன்று நிலைகளில் தடயங்கள் கிடைத்துள்ளன. கீழே இருப்பது முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்ததாகவும், மேலே இருப்பவை அதற்கு அடுத்தடுத்த கால கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் கணிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் புதைகுழிகள் அதிகம் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஈமச் சடங்குக்கு கல் நடுகிற பழக்கம் உள்ள புதைகுழிகள் தமிழகத்தின மற்ற இடங்களில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. கேரளாவில் மாங்காட்டு அகழாய்வில் கிடைத்துள்ளவற்றைவிட முற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் இப்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்துள்ள தாழிகள் சிவப்பு, நிறத்தில் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும் சிறிதளவு உயரமும் சொரசொரப்பான அமைப்பும் உடையவை. தாழிகளின் ஓரங்களில் விரல் பதிந்த வேலைப் பாடுகளும் ஆழமான முக்கோண வடிவப் புள்ளிகளும் காணப்படுகின்றன. தட்டையான கூம்பு வடிவ மூடிகள் உள்ளன. ஈமத்தாழிகளின் உள்ளே கறுப்பு, சிவப்பு நிற மட்பானைகள் காணப்படுகின்றன. சில தாழிகளின் உட்புறத்தில் ஆணி போன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருக்கிறது. இது உட்புறம் பொருட்களை தொங்கவிடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெரும்பாலான தாழிகளில் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் பகுதிகள் மட்டும்தான் காணப்படுகிறது. இந்த எலும்புகூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக் கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகிறது.
வெண்கலப் பொருட்கள் சிறந்த வேலைப்பாடுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. வாள், கத்தி, உளி போன்ற இரும்புச் சாமான்களும் பெருமளவில் காணப்படுகின்றன. பானையின் வெளிப்புறத்தில் மென்புடைப்பு சிற்பமாக பெண் உருவமும் மான், பறவை மற்றும் செடிகளும் உள்ளன. புடைப்பு சிற்ப பெண் உருவங்கள் தாய் தெய்வமாகக் கருதப்படுகின்றன. மேலும் வனப் பகுதியாக இருப்பதால் வள்ளிக் குறத்தியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. புடைப்பு சிற்பத்தின் வரி வடிவம் சிந்து சமவெளி பானை ஓடுகளில் காணப்படும் சிற்ப வரி வடிவ ஓவியங்களுக்கு நிகராக உள்ளன. இதுவும் கிடைக்கப்பெற்றுள்ள பானைகளின் வகைகளும் ஆதிச்சநல்லூர் கலாச்சாரத்தின் தொழில் நுட்ப மேலாண்மையைக் காட்டுவதாக உள்ளன.” என்கிறார் சத்தியமூர்த்தி. மேலும் வெண்புள்ளி அலங்கார வேலைப்பாடுகளும் பானை மேல் தீட்டப்பட்டுள்ளன. இது அக்கால படைப்பாளியின் அழகியல் மற்றும் படைப்புத்திறன் நேர்த்தியையும் மக்களின் ரசனையையும் காட்டுவதாக உள்ளது.
பொதுவாக மட்பாண்டங்கள், தாழி, கிண்ணம், தட்டு, நீண்ட கழுத்துடைய ஜாடி, மூடி, சிறிய பானைகள், பானை தாங்கும் நாற்காலிகள், வட்டிகள் போன்றவை மூன்று கால நிலைகளிலும் கிடைத்துள்ளன. ஆரம்ப கால மட்பாண்டங்கள் சிறப்பாகவும் நன்கு சுடப்பட்டவையாகவும் உள்ளன. பிற்காலங்களில் உள்ளவற்றில் இது காணப்படவில்லை. மூன்று அடுக்குகளிலும் ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவை வண்ணங்கள், உள்ளடக்கம், மற்றும் அமைப்பியல் வகைகளில் மாறுபட்டு உள்ளன. புதைக்கும் விதத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் வேறுபாடுகள் உள்ளன. உடலை அப்படியே கட்டி நிற்கும் நிலையில் தாழிக்குள் வைத்து புதைத்துள்ளார்கள்.
”அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் கிடைத்துள்ளதால் பக்கத்திலேயே மனிதர்களின் வாழிடங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக அது தாமிரபரணிக்கு இந்தப் பக்கம் இருக்கலாம். இந்த வருடம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் திட்டத்துடன் இருக்கிறோம். தாமிரபரணி பாதை மாறியுள்ளது. எனவே முதலில் அதன் பழைய பாதையை கண்டறிய வேண்டும். கி டைத்துள்ள மண் பாண்டங்கள் மணிப்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளன. அதன் முடிவு தெரியவரும்போது அதன் கலாச்சாரத்தின் காலத்தை அறிய முடியும். மேலும் அடக்ககுழியை தோண்டும் முறையையும் மூடும் முறையையும் அறிய முடியும். அது அச் சமூகத்தின் ஈமச்சடங்குகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துமாறு இருக்கும்” என்கிறார் சத்தியமூர்த்தி.
நன்றி: தீராநதி

தமிழர்களின் வினோத கட்டிடக்கலை- அதிசய இசைத்தூண்கள்


நண்பர்களே..!

நாம் வெறும் மூட நம்பிக்கைகளால் மூழ்கியவர்கள் அல்ல. இயற்பியலிலும், கட்டிடவியலிலும் காலத்தை வென்றவர்கள் என்பதற்கு இந்த இசைத்தூண்களே சாட்சி. நம் பெருமைகளை நாம் தான் மதிக்க வேண்டும். இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்

சமிபத்தில் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட இந்த தமிழ் கட்டிட கலையினை பற்றி அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என் விரும்புகிறேன்.

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது . அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது. இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள்.

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.அனிஷ் குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography " (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது . " spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது கட்டிக்காப்போம்..!

இந்த இசைத் தூண்கள் அமைந்துள்ள கோவில் பற்றிய தகவல்கள் கீழே குடுக்கப் பட்டுள்ளது.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில் நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும் தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள்.

கோயிலின் மூலக்கதை:

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

சிறப்புக்கள்:

* சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது.
* சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.
* திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க தலமாக விளங்குகிறது
* அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது.,
* சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
* 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம்.
* இக்கோவில் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது.

நன்றி: சசி மற்றும் — with நிர்மலா கணேஷ், ரௌத்திரம் பழகு,