செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

முற்காலத் தமிழ் நாகரிகம்



திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு ,சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த நிலப்பகுதி சமச்சீரான வெப்பம்; அரிதாகத்தான் மழை பெய்கிறது. எனவே தாமிரபரணி ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. தாவரங்கள் உயிர்த்தெழுந்ததும் கானமயில்களின் உற்சாக நடனம் தவறாமல் காணக்கிடைக்கும். இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள், மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் ஆதிச்ச நல்லூர் தான் என்பதை உறுதி செய்கின்றன.
விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்டுள்ள அகழாய்வில் சென்ற வருடம் 600 சதுர கி.மீ. பரப்பில் மட்டும் 160க்கும் மேலான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் எலும்புக்கூடுகள், உடையாத நல்ல முறையில் உள்ள மட்பாண்டங்கள், பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடிவான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய ஜாடிகள், மிகுதியான அளவில் மாவரைக்கும் கல், கழுத்தணிகள், கடகம், காப்புகள், வளையல்கள், மோதிரம், மகுடங்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இங்கு கிடைக்கும் தடயங்களை முன் வைத்து நம் முன்னோர்களின் கலாசாரத்தையும் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்” என்கிறார் இந்த அகழாய்வை மேற்கொண்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி.
உலகில் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தொடரும் மனித வரலாற்றை அறிவதற்கு, உலகம் முழுக்க அறிஞர்கள் பெரிதும் தொல்லியல் துறையைத் தான் சார்ந்திருக்கிறார்கள். இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள மனித வரலாறு, மனிதன் தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இருந்துதான் தொடங்குகிறது. மனிதன் தோன்றியது முதல், இலக்கியங்கள் படைக்கப்பட்டது வரையிலான இடைப்பட்ட கால கட்டத்தில் அவனது நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள, அவன் விட்டுச் சென்றுள்ள தொல்பொருள்கள் தான் இன்று நமக்கு முக்கிய ஆவணங்கள். அத்தகைய தொல்பொருட்கள் உலகின் பல்வேறு இடங்களில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிதான் அகழாய்வு.
”தமிழ்நாடு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும் தமிழகம் தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும் இப்போது ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு. 1000 வரைக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் மிகவும் முற்கால நாகரிகம் என்பதுடன் மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழகமும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் இப்போது ஆதிச்சநல்லூர் அகழாய்வை முக்கியத்துவம் உடைய தாக்குகிறது” என்கிறார் சத்தியமூர்த்தி.
முதலில் ஜெர்மானியர்கள்தான் ஆதிச்சநல்லூரில் வந்து ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். இனங்களின் வேர்களைக் கண்டறிவதுதான் அவர்களின் அக்கறை. அவர்கள் 25-30 எலும்புக் கூடுகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அறிக்கை எதுவும் தரவில்லை. எனவே அவர்களது ஆய்வு முடிவுகள் என்ன என்பது நமக்குத் தெரியாமலே போய்விட்டது. அப்புறம் ஆங்கிலேயர்கள் இந்தியப் பண்பாட்டின் தொன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். எனவே இந்தியா முழுவதும் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தொன்மை எச்சங்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை பல்லாவரத்தில் 1863 – ஆம் ஆண்டு நிலப்பொதியியல் அலுவலரான இராபர்ட் புரூஸ் புட் என்னும் அறிஞர் பழங்கற்கால கோடாரி ஒன்றைக் கண்டு பிடித்தார். மேலும் அத்திரம்பாக்கத்தில் உடைந்த புதை வடிவ மனிதக் கால் எலும்பு ஒன்றையும் கண்டுபிடித்தார். இராபர்ட் புரூஸ்தான் தமிழ்நாடு, கற்கால மனிதன் வாழ்ந்த பல தொன்மையான இடங்களைக் கொண்டுள்ளது என முதன் முதலில் உலகுக்கு உணர்த்தினவர். இதற்கு முன்னரே பிறிக்ஸ் என்பவர் நீலகிரிப் பகுதிகளில் 1837 – ஆம் ஆண்டளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பலவற்றை அகழ்ந்து அங்கு வாழும் பழங்குடி மக்களுக்கும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களுக்கும் இருக்கும் தொடர்பினை ஆய்வு செய்திருந்தார். இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளும் அகழாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இக்கால கட்ட ஆய்வுகள் பற்றி, ”அறிவியல் சார்ந்த அகழாய்வுகளோ, காலக் கணிப்பு முறைகளோ அக்கால கட்ட ஆய்வுகளில் பின்பற்றப்படவில்லை. எனவே அகழாய்வு செய்யப்பட்ட பல்வேறு இடங்களில் நிலவிய பண்பாட்டின் தாக்கத்தையும் காலத்தையும் இன்று நம்மால் சரியாக அறிய முடியவில்லை” என்கிறார் சத்தியமூர்த்தி.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் சர் மார்டிமர் வீலர் என்பவர் அறிவியல் சார்ந்த அகழாய்வு முறைகளை இந்தியத் தொல்லியல் துறையில் புகுத்தினார். சர் மார்டிமர் வீலர் கால கட்டத்தில்தான் தட்சசீலம், ஹராப்பா, தமிழ்நாட்டில் அரிக்கமேடு அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அரிக்கமேடு அகழாய்வு, வீலரின் மிகச் சிறந்த ஆய்வாக தொல்லியலாளர்களால் கருதப்படுகிறது. அரிக்கமேடு அகழாய்வு மூலம்தான் தமிழ்நாடு, உரோமாப்புரி நாட்டுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு அறியப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்விடப் பகுதிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ மேற்கொண்ட அகழாய்வுகள் மிகச் சிறந்த பண்பாட்டினை தமிழகம் கொண்டிருந்திருக்கிறது என்று வெளிஉலகுக்கு தெரியப்படுத்தின. அலெக்சாண்டர் ரீயின் முக்கிய இரண்டு அகழாய்வுகள் ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும்பேர் ஆய்வுகள். இவரது ஆய்வில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் இங்கு தொன்மையான நாகரிகம் ஒன்றிருந்ததை உறுதிப்படுத்தின. இவர் சேகரித்த வெண்கலப் பொருட்கள், சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த தாய் தெய்வ அமைப்புடைய வெண்கலத் திருவுருவம் போன்றவை. ”ஆதிச்சநல்லூர் ஊரிருக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆதிச்ச நல்லூருக்கு அருகில் உள்ள கொற்கையின் பண்பாட்டுக் காலத்துக்கும் முற்பட்டதாக இது இருக்க வேண்டும். கரிமம் 14 முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட கொற்கையின் காலம் கி.மு. 785. கொற்கையிலிருந்து வடக்காக ஒன்பது கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. எனவே முற்காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இருந்து, கடல் பின்னோக்கிச் சென்ற பின் தனது சிறப்பை இவ்வூர் இழந்திருக்க வேண்டும்” என்கிற முடிவுக்கு அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வுகள் வந்தன.
அலெக்ஸாண்டர் ரீக்கு முன்பே டாக்டர் ஜாகோர் என்ற பெர்லின் அருங்காட்சியக ஆய்வாளர் 1876 – ஆம் ஆண்டு தொடங்கி, தாமிரபரணியின் தென்பகுதியில் சுமார் 114 ஏக்கர் பரப்பளவு பரந்து காணப்படும் ஏரலில் ஆய்வுகள் செய்தார். இவர்தான் முதன் முதலில் ஆதிச்சநல்லூரை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர். இவருக்கு சில தாழிகள் கிடைத்தன. மேலும் மட்பாண்டங்கள், இரும்புபொருட்கள், எலும்புக் கூடுகளின் பகுதிகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் ஜாகோர் சேகரித்தார். ஆனால் அவற்றை அப்போது அவர் வெளியிடவில்லை. இப்போது அவரது சேகரிப்புகள் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜாகோரைத் தொடர்ந்து பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.லோனிசு லாபிக்கு 1903-04 ஆண்டுகளில் பல மட்கல வகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றை ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தார்.
அதன்பிறகு அலெக்ஸாண்டர் ரீ ஆய்வுகள் மேற்கொண்டார். சங்க இலக்கியங்களின் கால கட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களைத் தேடுவதுதான் ரீயினுடைய நோக்கம். அவருக்கு நிறையப் பொருட்கள் கிடைத்தன. ஜாகோரைவிட அதிக தாழிகளை இவர் கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 1872க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இவரது சேகரிப்பில் தங்கம் மற்றும் வெண்கல கலைப்பொருட்கள் மூடியுடன் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கல எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான், சேவல், புலி, யானை முதலியவையும் உள்ளன. மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பாகங்களாகவும் கிடைத்தன. விலங்கு உருவங்கள், இரும்புப் பொருட்கள், எண்ணற்ற பானை ஓடுகள் என்று அகழாய்வில் கிடைத்த அனைத்தையும் அலெக்சாண்டர் ரீ அட்டவணைப்படுத்தி பதிப்பித்தார். அவரது அறிக்கை, கீழ்த் தாமிரபரணிச் சமவெளியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பொதுவான தகவல்களைத் தருகின்றன. ”ஆனால் இவரது சேகரிப்பைக் கொண்டு அக்கால சமூகப் பொருளாதாரச் சூழலை வெளிக்கொணர்வது கடினம். விஞ்ஞானப் பூர்வமான தொல்லியல் அணுகுமுறையுடன் ஆய்வுகள் செய்யப்படாதது இவர் ஆய்வின் முக்கியக் குறை . அவரால் கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்த முடியவில்லை. அது அவருடைய குறை இல்லை. அக்காலகட்டத்தின் தொல்லியல் துறையின் சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. இப்போது நிறைய விஞ்ஞான முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவேதான் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இவ்வளவு தூரம் நாம் முன்னேறி வந்துள்ளோம்” என்கிறார் சத்தியமூர்த்தி.
மேலும், ”இந்த ஆய்வு மூலம் சங்ககாலத்துக்கு நம்மால் தேதி குறித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதை குழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்க முறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன என்கிறார் அவர்.
இப்போது மேல்நிலை, இடைநிலை, கீழே என்று மூன்று நிலைகளில் தடயங்கள் கிடைத்துள்ளன. கீழே இருப்பது முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்ததாகவும், மேலே இருப்பவை அதற்கு அடுத்தடுத்த கால கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் கணிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் புதைகுழிகள் அதிகம் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஈமச் சடங்குக்கு கல் நடுகிற பழக்கம் உள்ள புதைகுழிகள் தமிழகத்தின மற்ற இடங்களில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. கேரளாவில் மாங்காட்டு அகழாய்வில் கிடைத்துள்ளவற்றைவிட முற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் இப்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்துள்ள தாழிகள் சிவப்பு, நிறத்தில் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும் சிறிதளவு உயரமும் சொரசொரப்பான அமைப்பும் உடையவை. தாழிகளின் ஓரங்களில் விரல் பதிந்த வேலைப் பாடுகளும் ஆழமான முக்கோண வடிவப் புள்ளிகளும் காணப்படுகின்றன. தட்டையான கூம்பு வடிவ மூடிகள் உள்ளன. ஈமத்தாழிகளின் உள்ளே கறுப்பு, சிவப்பு நிற மட்பானைகள் காணப்படுகின்றன. சில தாழிகளின் உட்புறத்தில் ஆணி போன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருக்கிறது. இது உட்புறம் பொருட்களை தொங்கவிடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெரும்பாலான தாழிகளில் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் பகுதிகள் மட்டும்தான் காணப்படுகிறது. இந்த எலும்புகூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக் கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகிறது.
வெண்கலப் பொருட்கள் சிறந்த வேலைப்பாடுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. வாள், கத்தி, உளி போன்ற இரும்புச் சாமான்களும் பெருமளவில் காணப்படுகின்றன. பானையின் வெளிப்புறத்தில் மென்புடைப்பு சிற்பமாக பெண் உருவமும் மான், பறவை மற்றும் செடிகளும் உள்ளன. புடைப்பு சிற்ப பெண் உருவங்கள் தாய் தெய்வமாகக் கருதப்படுகின்றன. மேலும் வனப் பகுதியாக இருப்பதால் வள்ளிக் குறத்தியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. புடைப்பு சிற்பத்தின் வரி வடிவம் சிந்து சமவெளி பானை ஓடுகளில் காணப்படும் சிற்ப வரி வடிவ ஓவியங்களுக்கு நிகராக உள்ளன. இதுவும் கிடைக்கப்பெற்றுள்ள பானைகளின் வகைகளும் ஆதிச்சநல்லூர் கலாச்சாரத்தின் தொழில் நுட்ப மேலாண்மையைக் காட்டுவதாக உள்ளன.” என்கிறார் சத்தியமூர்த்தி. மேலும் வெண்புள்ளி அலங்கார வேலைப்பாடுகளும் பானை மேல் தீட்டப்பட்டுள்ளன. இது அக்கால படைப்பாளியின் அழகியல் மற்றும் படைப்புத்திறன் நேர்த்தியையும் மக்களின் ரசனையையும் காட்டுவதாக உள்ளது.
பொதுவாக மட்பாண்டங்கள், தாழி, கிண்ணம், தட்டு, நீண்ட கழுத்துடைய ஜாடி, மூடி, சிறிய பானைகள், பானை தாங்கும் நாற்காலிகள், வட்டிகள் போன்றவை மூன்று கால நிலைகளிலும் கிடைத்துள்ளன. ஆரம்ப கால மட்பாண்டங்கள் சிறப்பாகவும் நன்கு சுடப்பட்டவையாகவும் உள்ளன. பிற்காலங்களில் உள்ளவற்றில் இது காணப்படவில்லை. மூன்று அடுக்குகளிலும் ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவை வண்ணங்கள், உள்ளடக்கம், மற்றும் அமைப்பியல் வகைகளில் மாறுபட்டு உள்ளன. புதைக்கும் விதத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் வேறுபாடுகள் உள்ளன. உடலை அப்படியே கட்டி நிற்கும் நிலையில் தாழிக்குள் வைத்து புதைத்துள்ளார்கள்.
”அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் கிடைத்துள்ளதால் பக்கத்திலேயே மனிதர்களின் வாழிடங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக அது தாமிரபரணிக்கு இந்தப் பக்கம் இருக்கலாம். இந்த வருடம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் திட்டத்துடன் இருக்கிறோம். தாமிரபரணி பாதை மாறியுள்ளது. எனவே முதலில் அதன் பழைய பாதையை கண்டறிய வேண்டும். கி டைத்துள்ள மண் பாண்டங்கள் மணிப்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளன. அதன் முடிவு தெரியவரும்போது அதன் கலாச்சாரத்தின் காலத்தை அறிய முடியும். மேலும் அடக்ககுழியை தோண்டும் முறையையும் மூடும் முறையையும் அறிய முடியும். அது அச் சமூகத்தின் ஈமச்சடங்குகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துமாறு இருக்கும்” என்கிறார் சத்தியமூர்த்தி.
நன்றி: தீராநதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக