வணக்கம்....(சிரிக்கிறார்) நான் தமிழ் பேசுவேன். கொஞ்சம் கொஞ்சம். கொரியனில் சொகோஞ், சொகோஞ், வணக்கம் என்பதற்கு கொரியனில் பங்கப்தா, அப்பா, அம்மா இரண்டும் கொரியனிலும் அதே உச்சரிப்புதான். ஆக, கொரிய மொழிக்கும் தமிழுக்கும் வெகு நெருக்கமான உறவுள்ளது. நான் இங்கிலீஸ் தமிழ் அகாராதியையும், Passive voice தமிழ் அகராதியையும் படித்திருக்கிறேன். படித்ததில் சுமார் 500 வார்த்தைகள் கொரியனும், தமிழும் ஒரே உச்சரிப்பு, ஒரே பொருளை உடையதாக இருக்கிறது. இது மிகவும் ஆச்சர்யமான ஒன்று. (அவர் தானாகவே வியந்து போகிறார்)
உதாரணமாக, வலியை வெளிப்படுத்துவதற்கு கொரியனிலும், தமிழிலும் ஒன்றுதான், நீங்கள் (நம்மை குறிக்கிறார்) அதிர்ச்சி, ஆச்சர்யம் ஆகிய உணர்வை வெளிப்படுத்துவதற்கு அம்மம்மா... என்று வார்த்தையை பயன்படுத்துவீர்கள். கொரியனிலும் அதேதான் (பலமாக சிரிக்கிறார். தொடர்ந்து அமேசிங் என்று கூறிக்கொள்கிறார்) இது போல நிறைய இருக்கின்றன.
இன்னொன்று நீங்கள் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுவீர்கள். கொரியனில் தாலேதா பொருள் ஒன்று உச்சரிப்பும் ஒன்றுதான். மலை ஏறுவதற்கு தமிழில் ஏறு என்று சொல்வீர்கள். கொரியனில் ஓறு (வாய்விட்டு சிரிக்கிறார்) இன்னொன்றும் சொல்கிறேன். தவறு செய்தவர்களை தண்டிக்க கைது செய்வார்கள். கொரியனில் கதுதா நாள் கொரியனிலும் நாள் தான், அச்சச்சோ என்பது கொரியனில் அச்சா, சோறு என்பது கொரியனில் சாறு பாம்பு கொரியனில் பேம்ப் wife மனைவி கொரியனில் மனோரா இன்னும் பல பல ஒற்றுமைகள் உள்ளன.
கேள்வி: இந்த ஒற்றுமைக்கு அடிப்படையாக எதைக் கருதுகிறீர்கள்?
பதில்: கொரிய நாகரீகமும், தமிழர் நாகரீகமும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் போது இங்கே மாவிலைத் தோரணம் (mango leaves) கட்டுவார்கள், சொல்லப்போனால் கொரியனில் மாங்காய் கிடையாது. காரணம், குளிரான பகுதி. ஆதலால் மிளகாயை தோரணமாக கட்டுவார்கள். அதற்குப் பெயரும் மாவிலை தோரணம்தான். salt தமிழில் உப்பு அந்த காலத்தில் (Old tamil) சொக்கம், உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? (நாம் இல்லை என்று தலையாட்ட) உங்கள் தாத்தா, காலத்தில் நடைமுறையில் இருந்தது ஆச்சர்யம் என்னவென்றால் கொரியனிலும் அதேதான்.
கேள்வி: கொரியனும் தமிழும் ஒற்றுமை உள்ளதாக இருப்பது எப்படி?
பதில்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் ரோமானியர்களுடன் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். மேற்கில் ரோமானிய பேரரசும், கிழக்கில் சீனப் பேரரசும் இருந்திருக்கிறது. இந்த இரண்டு பேரரசுகளுக்கும் இடையில் தமிழ்ப் பேரரசு இருந்திருக்கிறது. தமிழர்கள் மிகச் சிறந்த கடலோடிகளாக இருந்திருக்கிறார்கள். 1973ல் ரோபர்ட் வர்சிங் என்ற உலகப் புகழ்பெற்ற அமெரிக்க அறிஞர், ஏன்சியன்ட் இந்தியா அண்ட் இட் இன்புளுயன்ஸ் இன் மார்டன் டைம்ஸ் என்ற புத்தகத்தை எழுதினார். இதை ப்ரங்கிளின் வார்ட்ஸ் இன் கார்பரேசன் எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் புத்தகத்தில் 57 வது பக்கத்தில், சில தமிழ் மன்னர்களிடம் ரோமன் வீரர்கள் பணிபுரிந்ததாக குறிப்புகள் உள்ளன.
தமிழர்கள் மிகவும் பலமானவர்கள். தமிழர்கள் இந்தோ சைனா உறவில் மேம்பட்டவர்களாக இருந்தனர். பாலி மொழி அறிந்திருந்தனர். கம்போடியா வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் நல்ல உறவில் இருந்தனர். இங்கெல்லாம் பல கோயில்களை தமிழர்கள் உருவாக்கியிருந்தனர். கம்போடியாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற அங்கோர் வாட் கோயில் இன்று இந்து காலச்சார சுற்றுலாத்தலமாகும். இது தமிழர்களின் உதவியால் உருவானதுதான். Chimpaஅரசு இந்து அரசுதான்.
இது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது ஏறக்குறைய 1600 ஆண்டுகாலம் நீடித்தது. இது தமிழர்களால் உருவாக்கப்பட்டு கட்டிக்காக்கப்பட்டு வந்தது. தமிழர்கள் வியாபார நிமித்தமாக தெற்கு சைனாவிற்கு வந்தனர். இறுதியாக தென் கொரியாவுக்கும் ஜப்பான் தீவுகளுக்கும் வந்தனர். கொரியாவின் வரலாற்றை இரண்டு புத்தகங்களில் தெளிவாக பார்க்க முடியும். ஒன்று சங்யுஸ் ஊசா மற்றொன்று, சங்யுஸ் ஹகி இந்தப் புத்தகங்களில் உள்ளபடி தென் கொரியாவின் முதல் அரசு கயா அரசுதான்.
இது இந்தியாவில் இருந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டது. நிச்சயமாக இது தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் உருவானதுதான். அதற்கு பல சான்றுகள் உள்ளன. அங்கு சிங்களம், கன்னடம், தெலுகு போன்றவை இருந்ததற்கான அடையாங்களே இல்லை. பொதுவாகவே சீனாவும் கொரியாவும் நீண்ட காலம் அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் நெருங்கிய தொடர்புடையவை. கொரியாவில் இருக்கும் பழக்க வழக்கங்கள் பல சீனாவில் இல்லை கொரியா மட்டுமே தமிழ் கலாச்சாரத்தோடு கலந்து இருந்ததை காண முடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கயா அரசுக்கு வெகு அருகில் உள்ள ஷில்லா அரசு இதன் மன்னராக இருந்தவர் சொக்தரை சொக் என்பது சொக்கலிங்கம்தான்.
சொக்கலிங்கம் என்பது தமிழ் சமூகத்தில் மிகவும் அறிமுகமான ஒன்று. சொக்கலிங்கம் என்பதன் சுருக்கம் சொக்கன். சொக் குடும்பங்கள் இன்னமும் தென் கொரியாவில் வாழ்ந்து வருகின்றன. ஷில்லாஅரசின் முதல் மன்னர் சொக்தரை எனும் சொக்கலிங்கம் துரைதான். ஆகவே, சொக்துரை நிச்சயம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்தான். இதனால்தான் கொரிய மக்கள் தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரத்தை அறிந்து அதை கடைப்பிடிக்கும் சூழ்நிலைகள் உருவாகியிருக்க வேண்டும். 2000 ஆண்டுகளாக இந்த பழக்க வழக்கங்கள் கொரியன் சமூகத்தில் மாறாமல் இருந்து வருகின்றன. இது வரலாற்று உண்மை. கற்பனை அல்ல. மலையாளம், சிங்களம், தெலுகு கலாச்சாரம் கொரியனில் இல்லை. தமிழ் காலாச்சாரம் மட்டும் தான். (மீண்டும், அமேசிங் என்று கண்கள் விரிய ஆச்சர்யத்தை காட்டுகிறார்)
கேள்வி: தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் இருந்து வந்த கலாச்சார உறவை அறிந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் உங்கள் ஆய்வை தொடருவீர்களா?
பதில்: நிச்சயமாக, ஆனாலும், கொரியன் பல்கலை கழகங்களில் தமிழ்ப்பண்பாடு, கலாச்சாரத்தை பாடமாக வைத்தால் நன்றாக இருக்கும். இப்போது இந்தியக் கலாச்சாரம் என்பதில் ஹிந்தியை மட்டுமே பாடமாக வைத்திருக்கிறார்கள். நான் கொரியன், தமிழர் ஆகியோரின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளைப்பற்றி ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் அவைகளை வெளியில் கொண்டு வருவேன். இதன் மூலம் கொரியன் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறையை கொண்டுவருவதற்கு முயற்சி செய்வோம். நான் இவற்றை முன்னெடுத்துச் செல்வேன். அதுமட்டுமல்ல, கொரியர்கள் இந்த ஆய்வின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். கனடாவிலுள்ள டொரோண்டோவில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நாங்கள் சந்தித்து இதைப்பற்றி ஆலோசிக்கிறோம். நான் கொரிய குடிமகனாக இருந்தாலும் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவன்.
கேள்வி: தமிழிலிருந்து வார்த்தைகளை கொரியா பெற்றிருப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், உங்களுடைய எழுத்துக்கள் சீனாவின் சித்திர எழுத்துக்களை நினைவுபடுத்துகிறதே?
பதில்: கொரிய மொழி தோன்றி 2000 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அது பேச்சு மொழியாகவே நீண்ட காலம் இருந்து வந்திருக்கிறது. எழுத்து வடிவில் 600 ஆண்டுகளுக்கு முன்புதான் கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்த மன்னர் சேஜோங் என்பவர்தான் சீன எழுத்துக்களை பின்பற்றி கொரியாவுக்கு எழுத்துகளை உருவாக்கினார். பிரஞ்சு மொழிக்கு ஆங்கில எழுத்துக்களின் வரிவடிவங்களை பயன்படுத்துவது போல கொரிய மொழிக்கு சீன மொழியின் வரி வடிவங்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழின் அடிப்படையில் அமைந்த சொற்கள் சீன வரிவடிவத்தில் பயன்படுத்தப்படுவதால்தான் அந்த எழுத்துக்களுக்கான பொருள் கொரிய மொழியில் வேறுபடுகிறது. மொழிக்கு ஒலி வடிவந்தான் அடிப்படை என்பதால், கொரிய மொழிக்கு அடிப்படை தமிழே!
கேள்வி: தங்கள் ஆய்வுகள் எங்களை மிகுந்த மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. செம்மொழி மாநாடு எப்படி இருந்தது?
பதில்: செம்மொழி மாநாடு என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (மீண்டும் அமேசிங் என்கிறார் விழிகள் விரிய) கொரியனிலும் கூட இது போல கலாச்சார பெருவிழாக்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இதுபோல இல்லை. இது மிகவும் அருமையாக இருந்தது. மற்றொன்றும் சொல்ல வேண்டும் சென்னையில் ஏறக்குறைய 3000 கொரியர்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் அவர்களுக்கான அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் தமிழர், கொரியன் தொடர்பான கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன். எதிர்காலத்தில் சென்னையில் இருக்கும் கொரியர்களும் தமிழர், கொரியன் கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன். கனடாவில் உள்ள டொரோண்டோவில் கொரியர்கள் தமிழ் கற்பதை நான் ஊக்குவித்து வருகிறேன். அவர்கள் ஏற்கெனவே தமிழை கொஞ்சம் கொஞ்சம் கற்றிருக்கின்றனர். நான் தமிழர்களை பணிவுடன் கேட்டுக் கொள்வதெல்லாம் அவர்களும் கொரிய மொழி கற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு அது மிகவும் சுலபம். இது தொடர்ந்தால் தமிழர்கள் கொரியர்கள் இருவருக்கும் இடையில் உறவு பலப்படும். வணக்கம்.
(கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் விடைபெற்றார் ).
சந்திப்பு: சமா.இளவரசன்
உதவி : தமிழன்
நன்றி: http://unmaionline.com
நான் படித்த செய்தியை அப்படியே கொடுத்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக