புதன், 5 செப்டம்பர், 2012

தமிழர் வரலாறு பகுதி - 5 (தமிழர் வரலாறு அமையும் வகை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்


9. தமிழர் வரலாறு அமையும் வகை

காட்சிப் பொருள், கருத்துப்பொருள் ஆகிய ஒவ்வொன்றற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (National) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப்படுவது. அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது.
வரலாற்று மூலங்கள் (Sources of History)
பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்:
1. தொல்பொருள்கள் (Antiquities) பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன.
2. இலக்கியம்
வெட்டெழுத்து (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன.
வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும்.
3. செவிமரபுச் செய்திகள் (Traditions)
4. பழக்கவழக்கங்கள்
5. மொழிநூற் சான்றுகள்
6. நிலநூற் சான்றுகள் (Geological evidence)
7. கடல்நூற் சான்றுகள் (Oceanographic evidence)
நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவதனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry), குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல.
தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று(Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று. நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே. அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரிநாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது. எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம். நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைகளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின.
துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (Bruce foote) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும். மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே.
இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரியெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனாரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியனவாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே.
தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும்.
"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்"

என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுவதும் "என்ப" "என்மனார் புலவர்" எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க.
உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா. இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக.
தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.
இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டிநாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில்,
முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ் வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன.
முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர் களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந் நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.
பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப்பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படாதிருத்தல் காண்க.
இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள்.
பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள்.
தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம்.
பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம்.
நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம்.
கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (Dynasty) வாரியாகவும், ஆள்நில (Territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும்.
"கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லியமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (Narrative) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது..............இதற்கு மறுதலையாக, துல்லியமான காலக்குறிப்பை நீக்கியமைவோமாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்பு கின்றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்கவழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும்" என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க்.10 அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளிவந்துள்ளமையால். இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும்.
தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றியுள்ள இந் நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடுகளையும் நாகரிகப் பண்பாடுகளையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலைசிறந்தது மொழியியலே யாம். அதனால், பெரும்பால் அதனையும், சிறுபால் இலக்கியத்தில் ஆங்காங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளையும், துணைக்கொண்டே இந் நூல் எழுதப்படுகின்றது.
தொடக்கந்தொட்டு இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (Descriptive) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்திகளைக் கூறும் தனிநிலைக் காண்டம், ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் காண்டம், ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந் நூல்.

தமிழர் வரலாறு பகுதி - 4 (தமிழ் வரலாற்றடிப்படை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்


8. தமிழ் வரலாற்றடிப்படை

மனோன்மணீய ஆசிரியர் பேரா. சுந்தரம்பிள்ளை அவர்கள் 1908 - லேயே,
"வடஇந்தியாவில் சமற்கிருதத்தையும் அதன் வரலாற்றையும் படித்து, நாவல (இந்தியா) நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அப் புதிரை (Problem) மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீவக்குறையே (Peninsula) இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களுட் பெரும் பாலார், ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடு களையும் மொழிகளையும் குமுகாய (சமுதாய) ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகின்றனர். இங்குக்கூட, வரலாற்றாசிரியனுக்கு உள்நாட்டுப் பாவினின்று அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாவாறு, ஆரியப்படுத்தம் பேரளவு நிகழ்ந்துள்ளது. ஆயின், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க இயலுமாயின், அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகின்றோமோ அவ்வளவு பிரித்தெடுக்கும் ஏந்து (வசதி) மிகும்.

"அங்ஙனமாயின், அறிவியல் முறைப்பட்ட இந்திய வரலாற்றா சிரியன், தன் ஆராய்ச்சியை, இதுவரை மிக நீடப் பெரு வழக்காகக் கையாளப்பட்டு வந்த முறைப்படி கங்கைச் சம வெளியினின்று தொடங்காமல், கிருட்டிணை காவேரி வைகையாற்றுப் பாய்ச்சல் நிலங்களினின்று தொடங்குதல் வேண்டும்" என்று எழுதினார். இந்திய வரலாற்றுத் தந்தையாகிய வின்சென்று சிமிது, தம் இந்திய முந்திய வரலாறு (Early History of India) என்னும் பொத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டி,
"குமுகாய வேறுபாடுகளும் அரசியல் மாற்றங்களும் உட்பட்ட செவ்விய இந்திய முந்திய வரலாறு விரிவாக எழுதப்படும் போது, கல்வி மிக்க பேராசிரியர் கொடுத்துள்ள குறிப்புகள் கைக்கொள்ளப் பெறும்; வரலாற்றாசிரியரும் தெற்கினின்று தொடங்குவார். அத்தகைய புரட்சிமுறையில் வரலாறு வரைதற்கேற்ற காலம் இன்னும் வராமையால், இன்று நான் பழைய முறையையே பின்பற்று கின்றேன்" என்று வரைந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டாகின்றது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராயிருந்த (P.T.) சீநிவாச ஐயங்காரும் இராமச்சந்திர தீட்சிதரும், தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களென்று நாட்டி, முறையே, தமிழர் வரலாறும் (1929), தென்னாட்டு வரலாறும் (1951) சிறந்த முறையில் எழுதியுள்ளனர்.
குமரிநாட்டுக் குறிப்பைக் கொண்ட சிலப்பதிகாரம் 1892-லேயே வெளிவந்ததாயினும், 1920-ற்குப் பின்னரே தமிழாராய்ச்சியாளரி டைக் குமரிநாட்டுக் கொள்கை வலுவுறலாயிற்று. குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்பது, இன்று முடிந்த முடிபும் மறுக்கொணா ததுமான உண்மையாகிவிட்டது. ஆயினும், ஏதேன் தோட்டக்கதை எழுத்துப்படி நம்பப்படுவதனாலும், பிராமணரின் சொல்வன்மை யினாலும், தமிழரின் சொலமாட்டாமையாலும், வையாபுரித் தமிழர் தொகை வளர்ச்சி யினாலும், மேலையர் இன்னும் இவ் வுண்மையை ஒப்புக்கொண்டிலர். அதனால், தமிழரின் முன்னோர் மேலையாசி யாவும் கிரீசும் போன்ற நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவர் என்னும் அடிப்படையிலேயே, மேனாட்டு மொழியா ராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இற்றை யறிவியல்களெல்லாம் மேலையர் கண்டு வளர்த்துவருபவை யாதலாலும், சிறந்த கருவிகள் அவரிடை யுண்மையாலும், ஆராய்ச்சி யில்லாரும், கற்ற பேதையரும், வேலைவாய்ப்புப் பெறும் இளைஞரும், கோடிக் குறிக்கோட் பொருளீட்டிகளும், தம் பெயர் விளம்பரத்தையே விரும்பும் தமிழ்ப்பற்றிலிகளும், மேலையர் சொல்வதையெல்லாம் தெய்வத் திருவாய்மொழியென நம்புகின்றனர் அல்லது கொள்கின்றனர்.

மொழிநூலை உலகில் தோற்றுவித்தவர் குமரிநாட்டுத் தமிழிலக்கண நூலாரேயென்றும், மொழியமைப்பில் தமிழுக் கொப்பானது வேறெம்மொழியும் இவ் வுலகில் இல்லையென்றும், மொழித்துறையில் மேலையரே தமிழரிடங் கற்கவேண்டியவ ரென்றும், ஆராய்ச்சியாளர் எத்துணைப் பேரறிஞராயிருப்பினும் அடிப்படை தவறாயின் முடிபுந் தவறாகு மென்றும், கருவிகள் எத்துணைச் சிறந்தனவேனும் அறிவற்றவை யாதலின் விலக்கும் வேறுபாடும் அறியாது என்றும் ஒரே நெறியிற் செல்லுமென்றும் மூழ்கிப்போன நிலவரலாற்றிற்கு அருங்கலந் தவிர வேறு எக் கருவியும் பயன்படா தென்றும் அறிதல் வேண்டும்.
சிறந்த கணிதரும் வானூலறிஞருமான சாமிக்கண்ணுப் பிள்ளை, தவறான அடிப்படைகொண்டாய்ந்ததனாலேயே, கோவலன் மதுரைக்குப் புறப்பட்ட நாள் 17-5-756 என்று முடிபுகொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சியை 8ஆம் நூற்றாண்டினதாகக் காட்டி விட்டர்.
ஒரு கொடிவழியிற் பின்னோரை முன்னோராக வைத்தாராயின், பேரன் பாட்டனையும் மகன் தந்தையையும் பெற்றதாகத்தான் முடியும். தலைகீழான அடிப்படை தலைகீழான முடிபிற்கே கொண்டுசெல்லும். இங்ஙனமே, குமரிநாட்டுத் தமிழ நாகரிகத்திற்கு, நெடுங் காலத்திற்குப்பின் அதன் வழிவந்த ஆரிய நாகரிகம் மூலமாகக் கூறப்படுகின்றது.
வாழை, தாழை என்னுஞ் சொற்கள் முற்றெதுகை வடிவின வேனும், 'வாழைப்பூ' என்பதுபோல் 'தாழைப்பூ' என்று வராது. Patrimony என்பதற் கொத்த பொருள் matrimony என்னுஞ் சொற்கில்லை. இவ்வகை வேறுபாட்டைக் கருவி அறியாது.பேரா.சீன் பிலியோசா கூறும் மின்னியல் எதிர்ப்புமானியும் செங்கற்காலக் கணிப்பு முறையும், முறையே சவப்புதையலுள்ள இடத்திலும் நிலத்திலுந்தான் பயன்படுமேயொழிய, மாந்தனுடம்பு மண்ணுஞ் சாம்பலுமாய்ப் போனவிடத்திலும் குமரிக்கண்டம் மூழ்கியுள்ள நீர்ப்பரப்பிலும் பயன்படாவென அறிக.
ஆகவே, கருவிகொண்டாராய்வதே அறிவியல் என்றும், நூலுத்தி பட்டறிவுகொண்டு ஆய்வதெல்லாம் உன்னிப்புவேலை (Guess work) என்றும் கூறுவது அறியாமை, வெறுப்பு, அழுக்காறு, தன்னலம், அடிமைத்தன்மை ஆகியவற்றின் விளைவேயாகும். விரல் என்னும் பெயர் விரி என்னும் வினையினின்றும், தோகை என்னும் பெயர் தொங்கு (தொகு) என்னும் வினையினின்றும் திரிந்துள்ளதைக் கால்டுவெலார் கண்டுபிடித்தது கருவி கொண்டன்று; தமிழ்க் கல்வியும் சொல்லாராய்ச்சித் திறனுங் கொண்டே. ஒவ்வொரு துறையிலும், உண்மையான ஆராய்ச்சியாளர்க்குப் பிறப்பிலேயே அதற்குரிய ஆற்றல் அமைந்துவிடுகின்றது. அது பின்னர்க் கல்வியாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றது. தேர்ச்சி பெற்ற மணிநோட்டகன், தொண் மணிகளுள் (நவரத்தினங்களுள்) எதைக் காட்டினும் உடனே அதன் உண்மையான மதிப்பைச் சொல்லி விடுகின்றான். அது ஏனையோர்க்கு இயலாமையால், அதை உன்னிப்பு வேலையென்று தள்ளிவிட முடியாது. இங்ஙனமே சொல்லாராய்ச்சி அல்லது மொழியாராய்ச்சித் திறன் இயற்கை யிலேயே அமையப்பெற்ற ஒருவர், இருவகை வழக்குத் தமிழையுங் கற்ற பின், ஒவ்வோரெழுத்துஞ் சொல்லும் திரியும் வகைகளையெல்லாங் கண்டு, வரலாறு, மாந்தனூல் (Anthropology), ஞாலநூல் (Geography), நிலநூல் (Geology), உளநூல் (Psychology) முதலிய அறிவியல்களொடு பொருந்த ஆய்வாராயின், பிறருக்குத் தோன்றாத சொல்லாக்க நெறிமுறைகளும் சொல்வேர்களும் சொல் வரலாறுகளும் அவருக்கு விளங்கித் தோன்றும். கீற்றும் (Skeat), வீக்கிலியும் (Weekley), சேம்பர்சு (Chambers) குழும்பாரும் தொகுத்த ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள், கருவித் துணைகொண்டு இயற்றப்பட்டன வல்ல.
ஒருவரது வரலாற்றை, அவர் உண்மையாகப் பிறந்த காலத் தினின்றும் இடத்தினின்றுமே தொடங்கல் வேண்டும். அஃதன்றி, வேறொரு காலத்திலும் வேறொரு நாட்டிலும் பிறந்தவராகக் கொள்ளின், அவர் வரலாறு உண்மையானதாயிருக்க முடியாது. தமிழ் அல்லது தமிழர் தோன்றிய இடம் தெற்கே மூழ்கிப்போன குமரிநாடே. ஆதலால், குமரிநாட்டை அடிப்படையாகக் கொண்டே தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாறுகளை வரைதல் வேண்டும். குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தை ஒப்புக்கொள்ளாதார், தமிழரேனும் அயலாரேனும், எத்துணைத் தமிழ் கற்றவரேனும், எப்பெரும் பட்டம் பெற்றவரேனும், தமிழியல்பை அறிந்தவராகார்; அதனால் தமிழர் வரலாற்றையும் அறிந்தவராகார். ஆகவே, குமரிநாட்டுக் கொள்கை தமிழ்ப் புலவரின் தகுதிகாட்டும் தனிச் சான்றாகும்.
தமிழரை என்றுந் தமக்கும், தமிழை என்றும் சமற்கிருதத்திற்கும், அடிப்படுத்த விரும்பும் பிராமணர், குமரிநாட்டுண்மையை ஒப்புக்கொள்ளின், தமிழின் முன்மையையும் அது சமஸ்கிருதத்திற்கு மூலமென்னும் உண்மையையும் ஒப்புக்கொண்டதாகுமாதலின், தமிழரும் தம்மைப்போல் வெளிநாட்டினின்று வந்தவரின் வழியினரென்றும், தமிழ் சமற்கிருதத்தினின்று கிளைத்தது அல்லது அதனால் வளம்படுத்தப்பட்ட தென்றும், சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியருமான பர். (S.K.) சட்டர்சியாரும், தென்னாட்டுப் பிராமணரும் சென்னைப் பல்கலைக் கழக வடமொழித் துறைத் தலைவருமான பர். (V) இராகவனாரும், 1952-ல் வெளிவந்த 'நந்தமோரியர் காலம்' (Age of Nandas and Mauryas) என்னும் கட்டுரைத் தொகுதியில், மொழியும் இலக்கியமும் (Language and Literature) என்னும் கட்டுரையில், தமிழரின் அல்லது திரவிடரின் முன்னோர் நண்ணிலக் கடற்கரை வாணரென்றும், கிரேத்தாத் (Crete) தீவில் 'தெர்மிலை' (Termilai) என்றும், சின்ன ஆசியாவின் (Asia Minor) தென்பகுதியிலுள்ள இலிசியாவில் (Lycia) 'த்ர்ம்மிலி' (Trmmili) என்றும் இருந்த இருகிளை வகுப்பினரைச் சேர்ந்தவரென்றும், அவர் பெயர் ஆரியத்தில் 'த்ரமிட' அல்லது 'த்ரமிள' என்றும், பின்னர்த் 'த்ரவிட' என்றும் திரிந்ததென்றும், அவர் தென்னிந்தியாவிற்கு வந்தபின் அப் பெயர் அவர் வாயில் 'தமிழ்' என மாறிற்றென்றும், அவர் மொழியி லிருந்த g j d d b என்னும் பிறங்கு நிறுத்தொலிகள் (Voiced stops) k ct t p என்னும் பிறங்கா நிறுத்தொலிகளாக (Voiceless stops) வலித்துப் போயின வென்றும், உளறிக் கொட்டியிருக்கின்றனர். ஒரு தனிப்பட்டவர் வாழ்க்கையை யேனும் ஒரு மாந்தரின வரலாற்றை யேனும் ஆய்ந்து நோக்கின், பிறங்கா வொலி பிறங்கொலியாக வளர்வதேயன்றிப் பிறங்கொலி பிறங்கா வொலியாகத் தளர்வது இயற்கை யன்மையைக் காணலாம்.
இனி, தம் தவற்றுக் கொள்கைக்கு அரண்செய்வதுபோலக் கருதிக் கொண்டு கன்னல், சுருங்கை, மத்திகை என்னும் தமிழ்ச் சொற்களின் திரிபான kanna, surigx, (surigg), mastix (mastigos) என்னும் கிரேக்கச் சொற்களைத் தமிழ்ச்சொற்களின் மூலமென்று, தலை கீழாகக் காட்டுவர் ஆரியரும் ஆரிய அடிமையரும். இதன் விளக்கத்தை என் 'வண்ணனை மொழிநூலின் வழுவியல்' என்னும் நூலிற் காண்க.
தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்னும் உண்மையை, (P.T.)சீநிவாசையங்கார் எழுதிய Stone Age in India, History of the Tamils என்னும் நூல்களையும், இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய Origin and Spread of the Tamils. Pre-Historic South India என்னும் நூல்களையும் படித்துணர்க.

பகுதி  5 தொடரும் ..  


தமிழர் வரலாறு பகுதி - 3 (நாகரிக மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

6. நாகரிக மாந்தன் பிறந்தகம்

மாந்தன் நாகரிக நிலைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு. மலையும் மலைசார்ந்த இடமுங் குறிஞ்சி; காடும் காடுசார்ந்த இடமும் முல்லை; நாடும் நாடுசார்ந்த இடமும் மருதம்; கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இவை ஆங்காங்குச் சிறப்பாகப் பூக்கும் பூ அல்லது வளரும் மரம்பற்றிப் பெயர் பெற்றன.
இயற்கை அல்லது அநாகரிக மாந்தன் விலங்கு பறவைகளை வேட்டையாடி வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி; அதற்கடுத்த படியாக, ஆடுமாடுகளைச் சிறப்பாக வளர்த்து வாழ்வதற்கு ஏற்ற இடம் முல்லை; அதற்கடுத்த படியாக, பயிர்த்தொழிலைச் சிறப்பாகச் செய்து வாழ்வதற்கு ஏற்ற இடம் மருதம்; அதற்கடுத்த படியாக, மரக்கலங்களைச் செய்து கடல் வாணிகத்தை நடத்துவதற்கு ஏற்ற இடம் நெய்தல். இந் நால் நிலங்களும் மாந்தன் நாகரிக வளர்ச்சிக் கேற்றவாறு அடுத்தடுத் திருந்தது அல்லது இருப்பது குமரிநாடும் அதனொடு இணைந்திருந்த இற்றைத் தமிழகமுமே.
இற்றைத் தமிழ்நாட்டிற் போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரிநாட்டிலும் மேல்கோடியிலேயே பெருமலைத்தொடரிருந்தது. அதனால், நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தது. இந் நிலைமைபற்றியே, குடதிசை மேல் (மேற்கு) என்றும், குணதிசை கீழ் (கிழக்கு) என்றும் பெயர் பெற்றன. ஒருவன் மேற்றிசையினின்று கீழ்த்திசை வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்நிலமும் முறையே அடுத்தடுத்திருக்கக் காண்பான். இந் நிலைமையைப் பிற நாடுகளிற் காண்டல் அரிது.
வெள்ளம் பள்ளத்தையே நாடுமாதலால், தமிழ்நாட்டில் பொருநையும் (தாம்பிரபரணியும்), வைகையும், காவிரியும் போலும் ஒரு பேரியாறு தோன்றும் மலையகத்தினின்று, ஒருவன் அவ்வாற்றுவழியே தொடர்ந்து வருவானாயின், நிலம் வரவரத் தாழ்ந்திருப்பதையும், குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலுமாக முறையே மாறுவதையுங் காண்பான். முதற்கால மாந்தன் இயற்கை யுணவையும் இயற்கை நீர்நிலையையுமே சார்ந்திருந்ததனாலும், மரஞ்செடிகொடி யடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் ஆறுதவிர வேறு வழி அவனுக்கின்மையாலும், குறிஞ்சியினின்று நெய்தல்வரை பெரும்பாலும் ஆற்றோரமாகவே இடம்பெயர்ந்து வந்ததாகத் தெரிகின்றது. ஆறு என்னுஞ் சொல்லுக்கு வழியென்னும் பொருள் தோன்றியதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

7. தமிழன் பிறந்தகம்



தமிழன் என்னும் இனம் தமிழ்பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்வாரியில் மூழ்கிப்போன குமரிநாடே. அதற்குச் சான்றுகள்:
1. தமிழும் அதனொடு தொடர்புள்ள திரவிடமொழிகளும் நாவலந் தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கிற் செல்லச் செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது திரிந்தும் சிதைந்தும் ஒடுங்கியும் இலக்கியமற்றும் இடையீடு பட்டும், தெற்கில் வரவர மெல்லோசை கொண்டும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும் செறிந்தும் இருத்தலும்.
2. நாவலந் தேயத்திற்கு வெளியே திரவிடமொழி யின்மையும், மேலை மொழிகளிலுள்ள தென்சொற்கட்கெல்லாம் தமிழிலேயே வேர் அல்லது வேர்ப்பொரு ளிருத்தலும்.
3. தென்மொழிக் குடும்பத்து இற்றை நாற்பெரு மொழிகளும் தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே வழங்குதலும்,   அவற்றுள் முழுத் தூய்மையுள்ள தமிழ் அந் நாட்டின் தென்கோடியிலிருத்தலும்.
4. தமிழ்நாட்டுள்ளும் தெற்கே செல்லச்செல்லத் தமிழ் திருந்தியும் சொல்வளம் மிக்கும் ஒலியெளிமையுற்றும் இருத்தலும், திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்னும் வழக்குண்மையும்.
5. வடநாட்டு முன்வட (பிராகிருத) மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட மொழிகளிலுமுள்ள வன்மெய்களின்றிப் பதினெண் மெய்களே தமிழிலிருத்தலும், எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை யடுத்துள்ள தீவுகளிலும் வழங்குதலும்.
6. தமிழ் முழுவளர்ச்சியடைந்து முத்தமிழான பின் ஏற்பட்ட தலைக்கழகம் குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளி யாற்றங் கரை மதுரையில் இருந்தமையும், குமரிக்கண்டத் தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டாத் தொன்மையும், அக் கண்டம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பே முழுகிப் போனமையும்.
7. தென்னைமரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந்தமையும், தென் என்னும் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.
8. பண்டைத் தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும், உரையாசிரியராற் குறிக்கப்பட்டுள்ள காரோதிமமும் (காரன்னமும்), ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் தீவில் இன்றுமிருத்தல்.
9. வாணிகத்தால் வந்த இரண்டோர் அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர) வகைகளுந்தவிர, மற்றெல்லாக் கருப் பொருள்களும், காலவகைகளும் நிலவகை களுமாகிய முதற் பொருளும், இன்றும் தென்னாட்டிற்கு இயற்கையாக வுரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல்.
10. தென்னாடு, தென்னர் (தென்னாட்டார்),தென்மொழி, தென்னவன் ( பாண்டியன்), தென்கலை என்னும் பெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவந்துள்ளமை.
11. தென்வடல், தெற்கு வடக்குத் தெரியாதவன், தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றவன், தென்பல்லிவடபல்லி (தலையணிகள்) முதலிய வழக்குகளில் தென்திசை முற்குறிக்கப் பெறுதல்.
12. கடைக்கழகக் காலத்தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென் புலத்தார் எனக் குறித்தமையும், கூற்றுவன் தென்றி சைக்கிழவன், தென்றிசை முதல்வன், தென்புலக்கோன் எனப் பெயர்  பெற்றிருத்தலும்.
13. தென்மொழி வளர்ச்சியின் முந்துநிலைகளையெல்லாம் தமிழே காட்டிநிற்றல்.
14. கோதுமை, வாற்கோதுமை, உறைபனி, பனிக்கட்டி முதலிய குளிர்நாட்டுப் பொருள்கள் பண்டைத் தமிழிலக்கியத்திற் சொல்லப்படாமையும், தமிழர்க்கு வந்தேறிக் கருத் தின்மையும்.
15. கடைக்கழகப் புலவர் நாற்பத்தொன்பதின்மராயும் இடைக் கழகப் புலவர் ஐம்பத்தொன்பதின்மராயும் இருக்க, தலைக் கழகப் புலவர் மட்டும் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மரா யிருந்தமை.
குறிப்பு: தலைக்கழகப் பாண்டியநாடு தெற்கே ஈராயிரங் கல் தொலைவு நீண்டு பரந்திருந்ததனால், அதற்கேற்பப் புலவர் தொகையும் மிக்கிருந்ததென அறிக.
116. தமிழ்ஞாலத்தின் நடுவிடமாக, நடவரசன் தில்லை மன்று குமரி நாட்டுப் பாண்டியனால் அமைக்கப் பெற்றமை.
குறிப்பு: தில்லைமன்று வடபாற் பனிமலைக்கும் தென்பாற் குமரிமலைக்கும் நடுவிடையே
          அமைந்ததனாலேயே, பேருலகத்தின் நெஞ்சத்தாவை நிகர்த்ததாயிற்று. இதன் விளக்கத்தை என் தமிழர் மதம் என்னும் நூலுட் காண்க. தில்லைக்கு வடக்கிற் பனிமலையளவு தொலைவிலேயே தெற்கிற் குமரிமலையும் இருந்தது.

பகுதி  4 தொடரும் .. 

தமிழர் வரலாறு பகுதி - 2 (மாந்தன் பிறந்தகம்) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

5. மாந்தன் பிறந்தகம்



தென்னிலம்

மாந்த இனங்களின் கொடிவழியும் பொதுப்படையான இடமாற்றங்களும் பற்றியகருதுகோள்: "மாந்தனின் முந்தியல் இருப்பிடம் இன்று இந்துமாவாரியில் மூழ்கியுள்ள ஒரு கண்டம் என்றும், அது இன்றுள்ளபடி ஆசியாவின் தென்கரையைநெடுகலும் அடுத்து (பெரும்பாலும் இருந்திருக்கக்கூடியபடி) அதனொடு சிலவிடங்களில் இணைந்தும்), கிழக்கில் அப்பாலை இந்தியாவும்(Further India) சண்டாத்தீவுகளும் வரையும், மேற்கில் மடகாசுக்கரும் ஆப்பிரிக்காவின் தென்கீழ்க்கரையும் வரையும், பரவியிருந்த தென்றும் கருதுவிக்கும் பல சூழ்நிலைகள் (சிறப்பாகக் காலக் கணக்கியல்உண்மைகள்) உள்ளன. விலங்குகளும் நிலைத்திணையும் பற்றிய பல ஞாலநூலுண்மைகள், அத்தகைய தென்னிந்தியக் கண்டமொன்று முன்னிருந்த தென்பதைப் பெரிதுங் காட்டுகின்றன. அக் கண்டத்திற்குச் சிறப்பாகவுரியன வாயிருந்த முந்தியற் பாலுண்ணிகளால், அது இலெமுரியா(Lemuria) எனப் பெயர் பெற்றது. அதை முதற்கால மாந்தனின் உறைவிடமாகக்கொள்வோ மாயின், மாந்த இனங்கள் இடம்பெயர்ந்து ஆங்காங்கும் குடியேறி யிருக்கும் திணையியற் பாதீடு எளிதாய் விளங்கிவிடும்."7
"மாந்த இனவாராய்ச்சி,வடபாகத்திலும் நண்ணிலக் கடற்கரை யிலும் இன்றுவாழும் மாந்த இனங்களின் முன்னோர்,தென்னிந்தியா வழியாகத்தான் அவ் விடங்கட்குச்சென்றிருந்தார் என்பது, எவ் வகையிலும்நடந்திருக்கக்கூடாத செய்தியன்று என்பதைக்காட்டும். இந்தியக் கீழ்கரையிற்கண்டெடுக்கப்பட்ட மாந்தனெலும்புக்
கூடுகட்கும் அடையாளங்கட்கும் உரிய காலம், இன்னதென்று தீர்மானிக்கப்படாததா யிருப்பினும், பொதுவாகக் கணிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முற்றும் அப்பாற்பட்டதாகும்."8
இதுவரை உலகிற் கண்டெடுக்கப்பட்ட மாந்தன் எலும்புக் கூடுகளுள், சாலித்தீவில் (Java) 1891-ல் தூபாயிசு என்பவரால் எடுக்கப்பட்டதற்குரிய "நிமிர்ந்த குரக்கு மாந்தன்" (Pithecanthropos Erectus) காலம் கி.மு. 5,00,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. 1961-ல் தென்னாப்பிரிக்காவில் தங்கனியிக்காவில் பேரா. இலீக்கி (Prof. Leakey) என்னும் ஆங்கில மாந்தனூ லறிஞராற் கண்டெடுக்கப்பட்டுள்ள ஈரெலும்புக் கூடுகளுள், ஒன்றற்குரிய 'நெற்றுடைப்பான்' (Nut cracker Man or sinjanthropos Boisi) இற்றைக்கு 6,00,000 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும், இன்னொன்றற்குரிய, இன்னும் பெயரிடப்படாத, நனிமிக முந்திய மாந்தன், குறைந்த பக்கம் 17,50,660 ஆண்டுகட்கு முற்பட்டவன் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க மாந்தனூற் பேராசிரியர் சிலர் மறுத்துள்ளனர். உண்மை எங்ஙன மிருப்பினும், சாலித்தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த பெருநாடே குமரிக்கண்ட மாதலின், அந் நிலத்திலேயே மாந்தன் தோன்றினானென்றும், அத் தோற்றம் கி.மு.5,00,000 ஆண்டுகட்கு முந்தியதென்றும், மறுப்பச்ச மின்றிக் கூறலாம்.
'உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும்' பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டி ருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல், "இந்துமா வாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்கரைவரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. கிளேற்றர் இப் பழங்காலப் பெருங்கண்டத்திற்கு, அதில் வதிந்த குரங்கொத்த உயிரிபற்றி இலெமுரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமா யிருந்திருக்கக்கூடுமாதலின், மிக முதன்மையானதாகும்"9 என்று கூறுகின்றார்.

தொன்னிலம்


நிலவியல் வரலாற் றாராய்ச்சிக்குத் தெரிந்தவரை, இஞ் ஞாலத்தின் தொன்முது பழம்பகுதியாயிருந்தது, தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிக்கண்டமே. யோவான் இங்கிலாந்து (John England) என்னும் ஆராய்ச்சியாளர், "கோடி யாண்டுகட்குமுன், ஒருகால் அதற்கும் முந்தி, ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தி யாவையும் இணைத்திருந்தது" என்பர்.
இற்றைத் தமிழகத்திலும், நீலமலை, ஆனைமலை, பழனிமலை, ஏலமலை, சேரவரையன் (சேர்வராயன்) மலை ஆகியவற்றின் பாறை வகை எழுபது கோடியாண்டுகட்கு முற்பட்டுத் தோன்றியதென நிலநூலாராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
நண்ணிலம்
முந்தியல் மாந்தனின் வாழ்விற் கேற்ற பல்வேறு நிலைமைகளை நோக்கின், இஞ் ஞாலத்தின் நடுவிடமே நிறைவுற்ற மாந்தன் பிறந்தகமா யிருந்திருக்க முடியுமென்பது புலனாகும். அத்தகைய இடம் குமரிக்கண்டமே. நண்ணிலக்கோடு (Equator) அதனூடேயே செல்வதைத் திணைப்படத்திற் (Map) காண்க.
முதனிலை மாந்தனின் மேனி முழுவதையும் மூடியிருந்த கோரைமயிர் உதிர்வதற்கும் மென்மையடைவதற்கும், வெப்பநாட்டு வாழ்க்கையே ஏற்றதாகும்.
ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்று பெயர் பெற்றுள்ளது, உண்மையில் இருகண்டத்திடைக் கடலேயன்றி நண்ஞாலக் கடலன்மை அறிக.

வண்ணிலம்

முதற்கால மாந்தன் காட்டுவிலங்காண்டியாகவும் அநாகரிக னாகவுமிருந்து, தன் வாழ்க்கைக்கு இயற்கை விளைவுகளையே சார்ந்திருந்ததனால், அவனுக்கேற்ற பெருவளநாடு குமரிக்கண்டமே.
ஏதேன் (Eden) தோட்டம் என்பது பல்வகைக் கனிமரங்கள் நிறைந்த வளநாட்டையே குறிக்கும். ஏதேன் என்பது இன்பம் என்று பொருள்படும் எபிரேயச் சொல். பாலும் தேனும் ஓடும் கானான் தேசமென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டாலும், மேலையாசியா விற்கு அது சிறந்ததேயன்றி ஞாலத்திற் சிறந்த நாடாகாது. நண்ணிலக்கடல் ஒரு காலத்தில் நேரே கிழக்குநோக்கி நீண்டு அமைதிமாவாரியிற் (Pacific Ocean) கலந்திருந்ததனால், அன்று கானானும் ஏதேன் தோட்டம் இருந்ததாகச் சொல்லப்படும் மெசொப்பொத்தேமியாவும் கடலடியில் இருந்திருத்தல் வேண்டும். அதற்கு முன்பு முதற்காலத்திலும் ஏதேன் தோட்டமிருந்த இடம் நிலப்பகுதியாகவே இருந்ததென்று கொள்ளினும், அது குமரிநாட்டினும் வளஞ் சிறந்ததாகக் கொள்ள முடியாது. அதை வளப்படுத்திய நாலாறுகளுள் ஒன்றான ஐபிராத்து (Euphretes) பஃறுளிபோற் பேரியாறன்று. அங்குள்ள மலைகளுள் ஒன்றும் குமரிபோற் பன்மலையடுக்கமன்று. இடையிடை வறண்ட வெம் மணற் பாலைகளும் பல வுள.
பனிமலை (இமயம்) போலும் குமரிமலைத் தொடரும் கங்கை போலும் பஃறுளியாறுங் கொண்டு, பசியுந் தகையுந் தணிக்க, இனியனவும் வாழ்நாள் நீட்டிப்பனவுமான கனிகளுங் காய்களும், மாரியுங் கோடையும் விளையும் பல்வகைத் தவசங்களும், சுவைமிக்க பயறுகளும், எளிதாகக் கில்லியெடுக்குங் கிழங்குகளும், தேனும் தெங்கிளநீரும் கடுங்கோடையிலும் வற்றாச் சுனைபொய்கைத் தெண்ணீரும், உணவும் மருந்துமான பல்வேறு விலங்கு பறவை யூனும், ஆடுமாடுகளின் பாலும், இராத்தங்கி யுறங்க மலைக்குகை களும் புடைகளும்; அற்றம் மறைக்க இலையுந்தோலும் மட்டையும் மரவுரியும் ஏராளமாகக் கிடைத்த குமரிநாடு போலும் இயற்கை வளநாடு இஞ்ஞாலத்தில் வேறேதேனு முண்டோ?
முகவை மாவட்டத்திலுள்ள பாரி பறம்புமலையும், ஆயிரத் தெண்ணூறாண்டுகட்கு முன் மூவேந்தராலும் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அதன்மேற் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைக் காலமெல்லாந் தாங்குமளவு எத்துணை இயற்கைவள முற்றிருந்த தென்பது,
"அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந்
தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன்" 
(புறம். 109)
 
என்று கபிலர் பாடியதனின்று அறியக்கிடக்கின்றது. மூவாயிரம் அடி உயரமுள்ள ஒரு சிறு மலை இத்தகைய வளத்ததெனின், பனிமலை போலும் பன்மலையடுக்கத்துக் குமரிமாமலைத் தொடர் எத்துணை வளத்ததா யிருந்திருத்தல் வேண்டும்!

காலமழையும் பொய்க்குமாறு முல்லையிலும் குறிஞ்சியிலு முள்ள சோலைக்காடுகளெல்லாம் பெரும்பாலும் அழிக்கப்பட்டும்,

நிலந் தாங்கக்கூடிய அளவுபோல் இருமடங்கு மக்கள்தொகை பெருகியும் உள்ள இக்காலத்தும், ஐம்பதிற்கு மேற்பட்ட வாழைக்கனி வகைகளும், ஒட்டுமாவல்லாத இருபான் மாங்கனி வகைகளும், நால்வகைப் பலாக்கனிகளும், கொழிஞ்சி, குடகு, நாரந்தம், வெள்ளரி, விளா, பனை முதலிய பிற கனிவகைகளும்; நெல்,கம்பு, வரகு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கண்ணி என்னும் தொண்வகைத் தவசங்களும், அவரை, துவரை, உழுந்து, மொச்சை, பாசி(பச்சை), தட்டான்(தட்டை), கல், கரம்பை(வயல்), கொள்(காணம்) என்னும் தொண்வகைப் பயறுகளும் ஆகிய பதினெண் கூலமும்; கறிசமைக்கப் பத்துவகைக் காய்களும், முப்பான் வகைக்கு மேற்பட்ட கீரைகளும் கறிசமைக்கவோ அவித் துண்ணவோ பயன்படும் பத்துவகைக் கிழங்குகளும் கிடைக்கின்றன.
நெல்லில் மட்டும், அறுபான்வகைச் சம்பாவும் நாற்பான்வகை மட்டையுமாக நூறுவகையுள்ளன. பொன்தினை, செந்தினை, கருந்தினை எனத் தினை முத்திறத்தது. சோளம் ஐவகையது. காராமணி, வரிக்கொற்றான் என்பன தட்டானுக்கு நெருங்கிய வகைகள்.
இற்றைத் தமிழகத்திலேயே இத்தனை இயற்கையுணவு வகைகளெனின், கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்குமுன் தெற்கில் 2500 கல் தொலைவு நீண்டு பரந்திருந்த குமரிக்கண்டப் பழம் பாண்டி நாட்டில், எத்தனை வகையிருந்தனவோ இறைவனுக்குத்தான் தெரியும்!
பிற நாடுகளிற்போல் என்றும் வற்றி வறண்டு கொதிக்கும் பாழ் மணற் பாலைவனமாகிய இயற்கைநிலம், தமிழகத்தில் எவ்விடத்தும் இருந்ததில்லை. இங்குள்ள பாலையெல்லாம், முல்லையுங் குறிஞ்சியும் முதுவேனிற் காலத்தில் நீர்நிலை வற்றி நிலைத்திணை (தாவரம்) பட்டு நிலங் காய்ந்த குறுங்கால நிலையினவே. கோடை மாறி மாரி பெய்தபின், அப் பாலைநிலம் புல்பூண்டும் மரஞ்செடி கொடிகளும் தளிர்த்து முன்போல் முல்லையுங் குறிஞ்சியுமாக மாறிவிடும். இங்ஙனம் பாலையின் நிலையில்லா நிலை நோக்கியே, அதனை நீக்கி ஞாலத்தை நானிலம் என்றனர் பண்டைத் தமிழறிஞர்.
கோவலனுங் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று மதுரைக்குச் சென்ற கடுங்கோடைக் காலத்தை,
"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்திய லிழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்
காலை" 

(சிலப்.11: 60-7)

என்று ஒரு மறையோன் கூற்றாக இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இந் நிலைமையை இன்றும் தமிழ்நாட்டில் முதுவேனிற் காலத்தில் குறிஞ்சி முல்லைநிலங்களிற் காண்க. இதனால், பண்டைத் தமிழகம் ஈடிணையற்ற பெருவள நாடாயிருந்த தென்பதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க.

 பகுதி  3 தொடரும் ..

தமிழர் வரலாறு பகுதி - 1 (ஞாலமுந்திய நிலை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

தமிழர் வரலாறு  பகுதி - 1

முன்னுரை
1. ஞாலமுந்திய நிலை
ஞாலம் என்பது மக்கள் வாழும் உலகமாகிய இம் மாநிலம். 'பூமி' என்னும் வடசொல்லை வேண்டாது வழங்கியதனால், ஞாலம் என்னும் தென்சொல் வழக்கற்றுப் போயிற்று. தென்சொல்லெனினும் தமிழ்ச் சொல்லெனினும் ஒக்கும்.
ஞாலநிலப்பாகம் இன்றுள்ளவாறு ஐந்து கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொன்றுதொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana), அங்காரம் (Angara), பாலதிக்கம் (Baltica), அமசோனியம் (Amazonia) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒருசில தீவுகளாகவும் பகுந்திருந்தது. காண்டவனம் ஆப்பிரிக்காவையும் கடகத் திருப்பத்திற்குத் (Tropic of Cancer) தெற்கிலுள்ள இந்தியாவையும் ஆத்திரேலியாவையும், அங்காரம் ஆசியாவின் வடகீழ்ப் பெரும்பகுதியையும், பாலதிக்கம் வட அமெரிக்காவின் வடகீழ்ப் பகுதியையும் கிரீன்லாந்து என்னும் பைந்தீவையும் ஐரோப்பாவின் தென்பகுதியையும், அமசோனியம் தென்னமெரிக்காவையும் தம்முட் கொண்டிருந்தன. அரபிக் கடலும் வங்காளக்குடாக் கடலும் அன்றில்லை. இந்துமாவாரியின் பெரும் பகுதியும் அத்திலாந்திக்க மாவாரியின் வடபகுதியும் நிலமாயிருந்தன. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று அமைதி மாவாரியொடு சேர்ந்திருந்தது. அதனால், பனிமலைத்தொடர் (இமயம்) அன்று கடலுள் மூழ்கியிருந்தது.1


2. எழுதீவுகள்
ஒரு காலத்தில் ஞாலநிலப்பகுதி ஏழு கண்டங்களாகவும் இருந்ததாகத் தெரிகின்றது. அவை ஒன்றினொன்று தீர்ந்திருந்தமை யால் தீவுகள் எனப்பட்டன (தீர்வு-தீவு). அவை பெருநிலப்பகுதி களாதலால் தீவம் என்றும் சொல்லப்படும் (தீவு-தீவம்).

வடமொழியாளர் தீவம் என்னுந் தென்சொல்லைத் 'த்வீப' என்று திரித்து, இருபுறமும் நீரால் சூழப்பட்டது எனப் பொருட் கரணியங் கூறுவர். தீவு என்பது நாற்புறமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியே.
ஒவ்வொரு தீவும் நிலைத்திணையால்(தாவரத்தால்) நிறைந்து ஒரு மாபெருஞ் சோலைபோல் தோன்றியதனால், பொழில் எனவும் பட்டது.
நாவலந்தீவு, இறலித் தீவு, இலவந்தீவு, அன்றில்தீவு, குசைத்தீவு, தெங்கந்தீவு, தாமரைத்தீவு என்பன எழுதீவுகள்.
"நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழ்பெருந் தீவும் ஏழ்பொழி லெனப்படும்"
என்பது திவாகரம். கிரவுஞ்சம், சான்மலி, புட்கரம் என்பன முறையே, அன்றில், இலவம், தாமரை என்பவற்றின் மொழிபெயர்ப்பான வடசொல்லாம். நாவல் என்பதைச் சம்பு என மொழிபெயர்த்தனர் வடவர். அன்றில் என்பது ஒரு பறவை வகை.
தெங்கந்தீவு என்பதையே எழுதீவுகளுள் ஒன்றாகத் திவாகரமும் பிங்கலமும் சூடாமணியும் கூறியிருப்பவும், அதற்குப் பகரமாகத் தேக்கந்தீவு என ஒன்றைக் குறித்ததோடு, அதைப் பிங்கலமென்றுங் காட்டியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி. தெங்கந்தீவு என்பதைத் தேக்கந்தீவு எனத் தவறாகப் பாடங்கொண்டு, அதற்கேற்பச் 'சாகத்வீப' என வடமொழியில் தவறாக மொழி பெயர்த்ததைச் சரிப்படுத்த வேண்டிச் சென்னை யகரமுதலி அவ் வழியை மேற்கொண்டது போலும்! ஆரியர் குமரிநாட்டுத் தமிழர்க்குக் காலத்தால் மிகமிகப் பிற்பட்டவராதலின், எழுதீவுக் கருத்தைத் தமிழிலக்கியத்தினின்றே கொண்டிருத்தல் வேண்டும்.
தீவு என்னும் பெயர், நாவலந்தீவு ஆப்பிரிக்காவினின்றும் பிரிந்துபோன நிலையைக் காட்டும்.

3. நாவலந்தீவின் முந்நிலைகள்
1. பனிமலையும் வடஇந்தியாவும் இல்லாத இந்தியப் பகுதி, தெற்கில் முழுகிப்போன
  குமரிக்கண்டத்தொடு அல்லது பழம் பாண்டிநாட்டொடு கூடியது.
2. பனிமலையொடு கூடிய இந்தியாவும் பழம் பாண்டிநாடும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி." 
(சிலப்.11:19.22)

என்று சிலப்பதிகாரம் கூறுவதால், பழம் பாண்டிநாடு முழுமையும் இருந்த காலத்தில் பனிமலையும் இருந்தமை அறியப்படும்.
3. பழம் பாண்டிநாடு இல்லாத இந்தியா.
நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார்"
(மணிமே. 25:12)

4. குமரிக்கண்டம் (Lemuria)
"மறைந்த குமரிக்கண்டம் (Lost Lemuria) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே, ஒரு பெருமலையானது மேலைக் கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக்குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுந்தொலைவு சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாசுக்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது. அம் மலைக்குக் கீழ்ப்பக்கம் உள்ள நாட்டில் பெருமலை ஒன்றுமிருந்ததாகத் தெரியவில்லை. இந்த மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்குவரை செல்லுகின்ற இமயமலையைப் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெரு மலைத்தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது" (சிலப் : 8:1) என்று பேரா.கா. சுப்பிரமணியப்பிள்ளை வரைந்திருப்பதனின்று, தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டம் என்னும் நிலப்பகுதி ஏறத்தாழ 2500 கல் தென்வடலாக நீண்டிருந்ததென்றும், அதன் மேற்குப்பகுதி நெடுகலும் ஒரு பெருமலைத்தொடர் தொடர்ந்திருந்ததென்றும் அறியப்படும்.
"முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி"
(புறம். 9)
என்று நெட்டிமையாரும்,
"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்" 
(சிலப்.11:19-20)
என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், குமரிக்கண்டமும், அதன் தென்கோடியின் மேலைப்பகுதியிலிருந்த குமரிமலைத் தொடரும், அதனின்று பாய்ந்தோடிய பஃறுளியாறும் கட்டுச் செய்திகளல்ல வென்றும் உண்மையாயிருந்தவை யென்றும் அறியலாம்.


"தொடியோள் பௌவமும்"(3. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், சை.சி. நூ.ப.க. பதிப்பு) என்னும் சிலப்பதிகாரத் தொடரின் உரையில், "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும்" என்று அடியார்க்குநல்லார் குமரிக்கண்டப் பகுதியாகிய பழம் பாண்டி நாட்டைப் பகுத்துக் கூறியிருப்பதும், கட்டுச்செய்தியா யிருக்க முடியாது.
"காலமுறைப்பட்ட உண்மைகளைக் கொண்டு, இற்றை மலையத் தீவுக் கூட்டம் முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேசு கூறியுள்ள முதன்மையான சான்று சிறப்பாக உவகையூட்டத்தக்கது. பொருநையோ (Borneo), சாலி (Java), சுமதுரா(Sumatra) என்னும் பெருந்தீவுகளைக் கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால் ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருகால், சற்று முந்திக் கூறிய குமரிக் (Lemuria) கண்டத்தோடும் அது இணைக்கப்பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிசு, மொலுக்காசு, புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக் கொண்ட கீழைப் பிரிவாகிய ஆத்திரேலிய-மலையத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் ஆத்திரேலியாவுடன் நேரே இணைக்கப் பட்டிருந்தது."4
"செடிகொடிகளிலும் உயிரிகளிலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிக நெருங்கிய ஒப்புமைகளைக்கொண்டு, திருவாளர் ஓல்டுகாம் ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிபு செய்கின்றார்."5
"இந்தியர்க்குப் பெயரே தெரியாத சில பழங்காலத்து மாபெரிய பப்பரப்புளி அல்லது யானைப்புளி அல்லது மேனாட்டு (சீமை)ப்புளி (Baobab) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்தியத் தீவக்குறையின் (Peninsula) தென்கோடியில், அயல்நாட்டு வணிகம் நிகழ்ந்து வந்த சில துறைமுகங்களில், அதாவது குமரிமுனை யருகிலுள்ள

கோட்டாற்றிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கையிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னுங் காணப்படுகின்றன.6
குமரிக்கண்ட நால்நிலைகள்
1. ஆப்பிரிக்காவொடும்,ஆத்திரேலியாவொடும் கூடிய பழம் பாண்டிநாடு.
2. ஆப்பிரிக்கா நீங்கிய பழம்பாண்டிநாடு.
3. ஆத்திரேலியாவும் நீங்கிய பழம்பாண்டிநாடு.
4. சிறிது சிறிதாய்க் குறைந்துவந்தபழம் பாண்டிநாடு.

பகுதி  2 தொடரும் ..


 

சனி, 1 செப்டம்பர், 2012

உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழியே! – தி மிர்ரர் – லண்டன் பத்திரிக்கை

இலண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் தி மிர்ரர் என்ற இதழில் 03–07–2012 ஆம் நாளிட்டு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

Question: What is the world’s oldest language still spoken today? – C.Mayo, Rotherham. 


Answer:  A recent archealogical evidence suggests that Tamil spoken in the Indian Sub-continent could have been the language used by the Indus civilization and even the Sumerians. References to rivers that dried up 10,000 years ago are seen in Tamil literature. In fact, there is a possibility that Tamil was the root of Sanskrit, in turn the root of all Indo-European language. -Flora Pulman Ivy Bridge, Devon

தமிழ் மொழிபெயர்ப்பு: 


கேள்வி: எது இன்றும் பேசப்பட்டு வருகிற உலகின் தொன்மையான மொழி?

பதில்: அண்மையில் வெளிவந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி சான்றுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றும் பேசப்பட்டு வருகிற தமிழ்மொழியே உலகின் தொன்மையான மொழி எனலாம். இம்மொழி சிந்துவெளி நாகரிக மக்கள், மற்றும் சுமேரியர்கள் ஆகியோரால் பேசப்பட்ட மொழி. தமிழ் இலக்கியங்களில் 10,000 வருடங்களுக்கு முன்னரே ஓடிக் காய்ந்து போன நதிகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உண்மையில் தமிழே சமஸ்கிருத மொழிக்கு வேரான மொழியாக இருந்திருக்கும் என்பதற்கும் வாய்ப்புகள் பல உள்ளன.

நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வது மட்டும் போதாது. தமிழனாக வாழ்வோம். தமிழுக்காக வாழ்வோம்.

இமெயில் வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர்

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? ஆம்… அதுதான் உண்மை. இன்று உலகையே ஒரு வலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார். அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார். இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார். ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார். நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார். இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தமிழரின் கணக்கதிகாரம் - பிதாகரஸ் கணித கோட்பாடு (Pythagoras Theorem)



தமிழின் பெருமைகள்
நான்கு வரி செய்யுளில் பிதாகரஸ் கணித கோட்பாடு !!!!
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பைதகரஸ் கோட்பாடு (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே. - போதையனார்


C = (a - a/8) + (b/2)

இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.

போதையனார் கோட்பாட்டின்ன் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும்.
தமிழன் ஒரு வேலை கற்றலையும்/கல்வியையும்
பொதுவுடமையாகவும், உலகறியச் செய்து இருந்தால் ....
அவர்கள் தரணி எங்கும் அறிய ப்பட்டு இருப்பார்கள் - நன்றி கவிதா பத்மநாபன்

(**** பிழையான விடை கிடைத்தால் எண்களை இடமாற்றிப் பாருங்கள், அண்ணளவான் விடை கிடைக்கும).

 Always choose 'a' as big நம்பர்.

இதில் ௦.5  துல்லியம் மாறலாம்.

யாரவது sqrt கணக்கை கணிப்பான் இல்லாமல் போட்டு காட்டுங்கள்.. வர்க்க அட்டைகளையும் உபயோகிக்காமல்.. அது மிகச் சிரமமான கணித முறை. ஆனால் நமது முன்னோர்கள் அளித்துள்ள கணிதச் சூத்திரம், மிக எளிதான கைகளாலேயே எண்ணிப் போட்டு விடை கண்டு பிடிக்குமளவு நுட்பமாக இருப்பதைக் கவனியுங்கள்.. எனக்கென்னவோ நமது முன்னோர்கள் இதை விட நுட்பமான துல்லியமான சூத்திரங்களை எல்லாம் கையாண்டு இருப்பார்கள் என்று தோன்றுகிறது. கோயில் கட்டிடங்களின் துல்லிய வடிவமைப்பு, அளவுகளைப் பார்க்கும் போது, இதை உணர முடிகிறது. நமது முன்னோர்களின் படைப்புகள், காலத்தாலும், சதிகளாலும் அழிக்கப்பட்டு விட்டன..

Example :
=======

a=15
b=37

பிதாகரஸ் தேற்றம் 

c = sqrt ((15 x 15 ) + (37 x 37))

= sqrt (225+1369)
= sqrt 1594
= 39.92

---------------------------------------------------
போதையனார் தமிழ் way

c = (15 - 15/8) + 37/2

= 13.125 + 18.5
= 31.625 - தவறான விடை..

ஆனால் இலக்கங்களை இடமாற்றிப் பார்ப்போம்..
(ஏனெனில் பிதாரகர்ஸ் தேற்றத்தில் எங்களை இடம் மாற்றினாலும் மதிப்பு மாறாது. ஆனால் இங்கே சமன்பாடு அப்படி அல்ல. எனவே இப்படி முயற்சிப்போம்..)
a = 37
b =15

c = 37 - 37/8 + 15/2

= 32.375 +7.5

= 39.875 --- கிட்டத்தட்ட பிதாகரஸின் விடையை(39.92) ஒத்து அமைகிறது.. 

so 
 Always choose 'a' as Big Number.


Summary :
=======

Pythagoras Theorem C = (a - a/8) + (b/2)

* choose 'a' as Big Number

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்

  பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்




பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்.. 
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.





ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..


1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.





எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும்,
கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !


Tamil numbers definition from 1 to infinity..(even yet to find in English):

@ நீட்டலளவு..
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
__________________


கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்


நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.


தமிழ் திங்கள் (மாதம்)

பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–
1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

தமிழரின் பெருமையும் பேரழிவும்

இயற்கையும் அழகும் அறிவும் ஆற்றலும் மனிதர்களாகிய எமக்கு இன்பத்தை அள்ளிவழங்கும் அமுதசுரபிகளாக இருக்கின்றன. ஆனால் அவையே துன்பத்தையும் கொட்டித் தருகின்றன என்பதே மிகக்கசப்பான உண்மையாகும். இந்த இன்ப துன்ப தராசுத் தட்டுகளிடையே துலாக்கோலின் நாக்குப்போல் இருப்பவன் ஞானியாகின்றான். மற்றவர்களில் பலர் இன்பத்திற்காக ஏங்கி ஏங்கி துன்பப்பட்டு அழிந்து ஒழிந்து போக, சிலரோ இன்பத்தில் திளைத்தும் துன்பத்தில் துவண்டும் போகின்றனர். இவர்கள் இன்பமெனச் சில பொழுதையும் துன்பமெனச் சில பொழுதையும் கழிக்கின்றார்கள். இந்த இன்ப துன்பங்களின் வரைவிலக்கணம் தான் என்ன?
மாங்காயைக் கடித்த ஒருவன் அதன் புளிப்பால் நாக்கூச முகத்தைச் சுழித்து காறி உமிழ்கின்றான். அதே மாங்காயைக் கடித்த மற்றவனோ ரசித்து ருசித்து மகிழ்ந்து உண்கின்றான். ஒரே மாங்காய் ஒருவனுக்கு இன்பத்தையும் மற்றவனுக்கு துன்பத்தையும் கொடுத்தது ஏன்? அது மாங்காயின் குறையா? இல்லையே! அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டையே இன்ப துன்ப அனுபவங்களாக நாம் கண்டோம். எனவே இன்ப துன்பங்களுக்கு மன உணர்வுகளே காரணம் ஆகின்றது.
திருவள்ளுவரும் இன்ப துன்பங்களுக்கு வரைவிலக்கணம் கூறாது நன்மை வரும் பொழுது நல்லவை என்று பார்த்து மகிழ்ந்தவர்கள் தீமை வரும் பொழுது துன்பப்படுவது ஏன்? எனக் கேள்வி எழுப்புவதன் மூலமாக விதியே (ஊழே) அதற்கான காரணம் என்கின்றார்.
“நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆங்கால்
அல்லற் படுவது எவன்”

- திருக்குறள் (379)
திருவள்ளுவரின் இக்கூற்றுப்படி ஆக்கமும் அழிவும் கூட மனித இன்ப துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றன. ஆக்கமும் அழிவும் மாறி மாறி சுழலும் சக்கரமாக இருப்பதை பல வழிகளில் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஒன்றின் ஆக்கத்திற்காக இன்னொன்று அழிக்கப்படுகின்றது. அதாவது ஒன்றை அழித்தே இன்னொன்றை உருவாக்கிக் கொள்கின்றோம்.
இயற்கையாக செழித்து வளர்ந்த மரத்திலிருந்து வீடு, கட்டில், தொட்டில், மேசை, நாற்காலி என எத்தனை பொருட்களை விதவிதமாக மனிதன் உண்டாக்கிக் கொள்கின்றான். ஏன் நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தாள் கூட மரத்தை அழித்து ஆக்கியது தானே! மனிதர்களின் ஆடம்பர வாழ்வுக்காக காடுகள் அழிக்கப்பட்டு உலகம் நகரமயமாக ஆக்கப்படுகின்றது. இதனால் இயற்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் மாபெரும் அனர்த்தங்களை பேரழிவுகளை உலகிற்கு தரவிருக்கின்றது.



எரிமலை, நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி, பனி, உருகுபனி, இடி, மின்னல், மழை, வௌ;ளப்பெருக்கு, தொற்றுநோற்கள் என இயற்கையால் ஏற்படும் பேரழிவுகள் எத்தனை? எத்தனை? இந்தப் பேரழிவுகளை எல்லாம் தடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ப்படுகின்றன என்பதை உலகோருக்குக் காட்ட என்றே வருடத்தில் ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அத்தினம் எப்போது வருகின்றது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? காதலர் தினம் எப்போ வரும்? என்றால் உடனே பெப்ரவரி 14 என்று சொல்லத் தெரிந்த எமக்கு உலகப்பேரழிவுத் தடுப்புத்தினம் ஒக்டோபர் 14 என்பது தெரியாது. விஞ்ஞான அறிவில் இயற்கையையும் விஞ்சிவிட்டோம் என இன்றைய மனிதர்களாகிய எம்மால் சொல்லமுடியுமா? முடியாது. ஏனெனில் நாம் இயற்கையின் வட்டத்திற்குள் இருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால் அன்றைய மனிதர் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். ஈழத்தின் பேராற்றங்கரையில் நின்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என முழங்கிய மணிபூங்குன்றனாரே
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
- நற்றிணை 226.1
மனிதர்கள் மருந்துக்காகக் கூட மரம் செத்துப் போகும்படி, மரத்திலிருந்து மருந்திற்கு தேவையான பகுதிகளை எடுக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். தம்மைப்போல மரங்களையும் தமிழர் நேசித்ததை இந்த நற்றிணைப் பாடல் வரி எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. எம் மூதாதையரிடம் இருந்த இந்த இயற்கை நேயம் எம்மைவிட்டு எங்கே போயிற்று? அதுமட்டுமா போயிற்று? இன்னும் எத்தனை எத்தனை கண்டுபிடிப்புக்கள் மாற்றார் வீட்டுப் பெட்டகங்களில் உறங்கி புதுப்பெலிவுடன் புதுஉடை உடுத்து அன்னநடை நடந்து எம்முன்னே வலம்வருகின்றன.




செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே…

- புறநானூறு :30:1-7
சூரியனின் இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்பட்ட மண்டிலமும், காற்றுச் சுழலும் திசையும் ஒருவித ஆதாரமுமின்றி தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற இவற்றை எல்லாம் சென்று அளந்து அறிந்தவர் போல எப்பொழுதும் இதுயிது இப்படிப்பட்ட அளவையுடையன என்று சொல்லும் கல்வியறிவுடையோரும் இருக்கின்றனர். எங்கே போயிற்று இந்த வானியல் அறிவு?
தமிழரின் அறுவகை நிலப்பண்புகளுக்கு அமைய மலையிலும் காட்டிலும் வயலிலும் கடலிலும் பாலைவனத்திலும் அந்தந்த மக்களின் பண்பாய் ஒலித்த பண்கள் எங்கே? குறிஞ்சியாழ், முல்லையாழ், மருதயாழ், பாலையாழ், முல்லைக்குழல், ஆம்பற்குழல் என இருந்த யாழ்களும் குழல்களும் எப்படி அழிந்தன?
புரிநரம்பு இன்கொளப் புகல்பாலை ஏழும்
எழுப்புணர் யாழும் இசையும் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந்து ஆர்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க
- பரிபாடல் 7:77-80
ஆதாரசுருதியாய் குழலிசை அளந்து நிற்க நடந்த அந்த ஆடல் வடிவத்திற்கு என்ன நடந்தது? தமிழரின் ஓவியக்கலையும் சிற்பக்கலையும் எங்கே ஓடி ஒளித்தன? சித்தமருத்துவமும் யோகமும் சிதைந்து போனது ஏன்? இறந்தவனையே தமிழர் எழுப்பினான் என்கின்றது இருக்கு வேதம். அப்படி இருக்க எப்படி எமக்கு முதல்நூல்கள் ஆயின இந்த வேதங்கள்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழர் மத்தியில் சாதிவேறுபாடும் சமயமாறுபாடும் எங்கிருந்து வந்து புகுந்தன? நிறைமொழி மாந்தராய் வாழ்ந்த தமிழர் பிறமொழி மந்திரத்தில் மயங்கியது எப்படி?
இயற்கையும் பெரும் போர்ப்படைகளும் இரசாயன, உயிரியற் குண்டுகளும் செய்யமுடியாத மாபெரும் கலாச்சாரப் பேரழிவை தமிழர் தாமே தமக்குச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். கூலிக்கு மாரடிக்கும் தற்குறிகள் இருக்கும் மட்டும் இதுபோல் பேரழிவுகள் தொடரும் எனச் சொல்லி தப்பிப்பது அழகல்ல. கையில் வெண்ணைய் இருக்க நெய்க்கு அலைபவர் நாம். எமது பெருமை எமக்குத் தெரியாது. வேற்று மொழிக்கார் தமிழைப் படித்து அதனை அவர்களது மொழியில் எழுதிய பின்னர் நாம் அந்த மொழிபெயர்ப்பை படித்து அவர் எப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார் தெரியுமா? என அங்கலாய்ப்போம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டது போல தமிழர்களாகிய நாமே தமிழைப்படிக்காது பேசாது பேரழிவை உண்டாக்கிக் கொண்டோம்.
தமிழா! எத்தகைய பேரழிவு வந்தாலும் பன்னெடுங்காலமாக உலகெலாம் பரந்து விரிந்து நிற்கின்ற நின் பெருமை என்பது கெடுமோ? தமிழன் என்று சொல்லி துணிந்து நில். தமிழ் தமிழாய் வாழ விரைந்து செயற்படு.


நன்றி:  ஆம்பல்


மேற்கண்ட கட்டுரையை படித்ததும் இந்த பதிவை மாற்றாமல் பதிவேற்ற நினைத்து அப்படியே கொடுத்துள்ளேன். தமிழர் பெருமையை பறைசாற்றிய  தமிழரசிக்கு நன்றி. 

முற்காலத் தமிழ் நாகரிகம்



திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், இருபத்தி நான்கு கி.மீ. தென்கிழக்கில், தாமிரபரணி ஆற்றின் வல திசையில் ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் மேல் திசையில் இருக்கிறது ஆதிச்சநல்லூர். அழகிய சிற்றூர். கறுப்பு ,சிவப்பு மண்மேடுகள் களிமண் மணலாய் வியாபித்திருக்கும் பரந்த நிலப்பகுதி சமச்சீரான வெப்பம்; அரிதாகத்தான் மழை பெய்கிறது. எனவே தாமிரபரணி ஆற்று நீர்ப் பாசனத்தை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது. தாவரங்கள் உயிர்த்தெழுந்ததும் கானமயில்களின் உற்சாக நடனம் தவறாமல் காணக்கிடைக்கும். இங்கு இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள், மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் ஆதிச்ச நல்லூர் தான் என்பதை உறுதி செய்கின்றன.
விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்டுள்ள அகழாய்வில் சென்ற வருடம் 600 சதுர கி.மீ. பரப்பில் மட்டும் 160க்கும் மேலான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் எலும்புக்கூடுகள், உடையாத நல்ல முறையில் உள்ள மட்பாண்டங்கள், பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடிவான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய ஜாடிகள், மிகுதியான அளவில் மாவரைக்கும் கல், கழுத்தணிகள், கடகம், காப்புகள், வளையல்கள், மோதிரம், மகுடங்கள் போன்றவையும் கிடைத்துள்ளன. இங்கு கிடைக்கும் தடயங்களை முன் வைத்து நம் முன்னோர்களின் கலாசாரத்தையும் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்” என்கிறார் இந்த அகழாய்வை மேற்கொண்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி.
உலகில் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு தொடரும் மனித வரலாற்றை அறிவதற்கு, உலகம் முழுக்க அறிஞர்கள் பெரிதும் தொல்லியல் துறையைத் தான் சார்ந்திருக்கிறார்கள். இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள மனித வரலாறு, மனிதன் தோன்றி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இருந்துதான் தொடங்குகிறது. மனிதன் தோன்றியது முதல், இலக்கியங்கள் படைக்கப்பட்டது வரையிலான இடைப்பட்ட கால கட்டத்தில் அவனது நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள, அவன் விட்டுச் சென்றுள்ள தொல்பொருள்கள் தான் இன்று நமக்கு முக்கிய ஆவணங்கள். அத்தகைய தொல்பொருட்கள் உலகின் பல்வேறு இடங்களில் மண்ணுக்குள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிதான் அகழாய்வு.
”தமிழ்நாடு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும் தமிழகம் தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும் இப்போது ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு. 1000 வரைக்கும் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் மிகவும் முற்கால நாகரிகம் என்பதுடன் மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழகமும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதுதான் இப்போது ஆதிச்சநல்லூர் அகழாய்வை முக்கியத்துவம் உடைய தாக்குகிறது” என்கிறார் சத்தியமூர்த்தி.
முதலில் ஜெர்மானியர்கள்தான் ஆதிச்சநல்லூரில் வந்து ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். இனங்களின் வேர்களைக் கண்டறிவதுதான் அவர்களின் அக்கறை. அவர்கள் 25-30 எலும்புக் கூடுகளை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அறிக்கை எதுவும் தரவில்லை. எனவே அவர்களது ஆய்வு முடிவுகள் என்ன என்பது நமக்குத் தெரியாமலே போய்விட்டது. அப்புறம் ஆங்கிலேயர்கள் இந்தியப் பண்பாட்டின் தொன்மையை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். எனவே இந்தியா முழுவதும் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தொன்மை எச்சங்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் சென்னை பல்லாவரத்தில் 1863 – ஆம் ஆண்டு நிலப்பொதியியல் அலுவலரான இராபர்ட் புரூஸ் புட் என்னும் அறிஞர் பழங்கற்கால கோடாரி ஒன்றைக் கண்டு பிடித்தார். மேலும் அத்திரம்பாக்கத்தில் உடைந்த புதை வடிவ மனிதக் கால் எலும்பு ஒன்றையும் கண்டுபிடித்தார். இராபர்ட் புரூஸ்தான் தமிழ்நாடு, கற்கால மனிதன் வாழ்ந்த பல தொன்மையான இடங்களைக் கொண்டுள்ளது என முதன் முதலில் உலகுக்கு உணர்த்தினவர். இதற்கு முன்னரே பிறிக்ஸ் என்பவர் நீலகிரிப் பகுதிகளில் 1837 – ஆம் ஆண்டளவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பலவற்றை அகழ்ந்து அங்கு வாழும் பழங்குடி மக்களுக்கும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களுக்கும் இருக்கும் தொடர்பினை ஆய்வு செய்திருந்தார். இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளும் அகழாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இக்கால கட்ட ஆய்வுகள் பற்றி, ”அறிவியல் சார்ந்த அகழாய்வுகளோ, காலக் கணிப்பு முறைகளோ அக்கால கட்ட ஆய்வுகளில் பின்பற்றப்படவில்லை. எனவே அகழாய்வு செய்யப்பட்ட பல்வேறு இடங்களில் நிலவிய பண்பாட்டின் தாக்கத்தையும் காலத்தையும் இன்று நம்மால் சரியாக அறிய முடியவில்லை” என்கிறார் சத்தியமூர்த்தி.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் சர் மார்டிமர் வீலர் என்பவர் அறிவியல் சார்ந்த அகழாய்வு முறைகளை இந்தியத் தொல்லியல் துறையில் புகுத்தினார். சர் மார்டிமர் வீலர் கால கட்டத்தில்தான் தட்சசீலம், ஹராப்பா, தமிழ்நாட்டில் அரிக்கமேடு அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அரிக்கமேடு அகழாய்வு, வீலரின் மிகச் சிறந்த ஆய்வாக தொல்லியலாளர்களால் கருதப்படுகிறது. அரிக்கமேடு அகழாய்வு மூலம்தான் தமிழ்நாடு, உரோமாப்புரி நாட்டுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு அறியப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்விடப் பகுதிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ மேற்கொண்ட அகழாய்வுகள் மிகச் சிறந்த பண்பாட்டினை தமிழகம் கொண்டிருந்திருக்கிறது என்று வெளிஉலகுக்கு தெரியப்படுத்தின. அலெக்சாண்டர் ரீயின் முக்கிய இரண்டு அகழாய்வுகள் ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும்பேர் ஆய்வுகள். இவரது ஆய்வில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் இங்கு தொன்மையான நாகரிகம் ஒன்றிருந்ததை உறுதிப்படுத்தின. இவர் சேகரித்த வெண்கலப் பொருட்கள், சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த தாய் தெய்வ அமைப்புடைய வெண்கலத் திருவுருவம் போன்றவை. ”ஆதிச்சநல்லூர் ஊரிருக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆதிச்ச நல்லூருக்கு அருகில் உள்ள கொற்கையின் பண்பாட்டுக் காலத்துக்கும் முற்பட்டதாக இது இருக்க வேண்டும். கரிமம் 14 முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட கொற்கையின் காலம் கி.மு. 785. கொற்கையிலிருந்து வடக்காக ஒன்பது கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. எனவே முற்காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இருந்து, கடல் பின்னோக்கிச் சென்ற பின் தனது சிறப்பை இவ்வூர் இழந்திருக்க வேண்டும்” என்கிற முடிவுக்கு அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வுகள் வந்தன.
அலெக்ஸாண்டர் ரீக்கு முன்பே டாக்டர் ஜாகோர் என்ற பெர்லின் அருங்காட்சியக ஆய்வாளர் 1876 – ஆம் ஆண்டு தொடங்கி, தாமிரபரணியின் தென்பகுதியில் சுமார் 114 ஏக்கர் பரப்பளவு பரந்து காணப்படும் ஏரலில் ஆய்வுகள் செய்தார். இவர்தான் முதன் முதலில் ஆதிச்சநல்லூரை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர். இவருக்கு சில தாழிகள் கிடைத்தன. மேலும் மட்பாண்டங்கள், இரும்புபொருட்கள், எலும்புக் கூடுகளின் பகுதிகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் ஜாகோர் சேகரித்தார். ஆனால் அவற்றை அப்போது அவர் வெளியிடவில்லை. இப்போது அவரது சேகரிப்புகள் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜாகோரைத் தொடர்ந்து பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.லோனிசு லாபிக்கு 1903-04 ஆண்டுகளில் பல மட்கல வகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றை ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தார்.
அதன்பிறகு அலெக்ஸாண்டர் ரீ ஆய்வுகள் மேற்கொண்டார். சங்க இலக்கியங்களின் கால கட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களைத் தேடுவதுதான் ரீயினுடைய நோக்கம். அவருக்கு நிறையப் பொருட்கள் கிடைத்தன. ஜாகோரைவிட அதிக தாழிகளை இவர் கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 1872க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இவரது சேகரிப்பில் தங்கம் மற்றும் வெண்கல கலைப்பொருட்கள் மூடியுடன் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கல எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான், சேவல், புலி, யானை முதலியவையும் உள்ளன. மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பாகங்களாகவும் கிடைத்தன. விலங்கு உருவங்கள், இரும்புப் பொருட்கள், எண்ணற்ற பானை ஓடுகள் என்று அகழாய்வில் கிடைத்த அனைத்தையும் அலெக்சாண்டர் ரீ அட்டவணைப்படுத்தி பதிப்பித்தார். அவரது அறிக்கை, கீழ்த் தாமிரபரணிச் சமவெளியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பொதுவான தகவல்களைத் தருகின்றன. ”ஆனால் இவரது சேகரிப்பைக் கொண்டு அக்கால சமூகப் பொருளாதாரச் சூழலை வெளிக்கொணர்வது கடினம். விஞ்ஞானப் பூர்வமான தொல்லியல் அணுகுமுறையுடன் ஆய்வுகள் செய்யப்படாதது இவர் ஆய்வின் முக்கியக் குறை . அவரால் கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்த முடியவில்லை. அது அவருடைய குறை இல்லை. அக்காலகட்டத்தின் தொல்லியல் துறையின் சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. இப்போது நிறைய விஞ்ஞான முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவேதான் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இவ்வளவு தூரம் நாம் முன்னேறி வந்துள்ளோம்” என்கிறார் சத்தியமூர்த்தி.
மேலும், ”இந்த ஆய்வு மூலம் சங்ககாலத்துக்கு நம்மால் தேதி குறித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதை குழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்க முறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன என்கிறார் அவர்.
இப்போது மேல்நிலை, இடைநிலை, கீழே என்று மூன்று நிலைகளில் தடயங்கள் கிடைத்துள்ளன. கீழே இருப்பது முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்ததாகவும், மேலே இருப்பவை அதற்கு அடுத்தடுத்த கால கட்டத்தைச் சேர்ந்தவை என்றும் கணிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் புதைகுழிகள் அதிகம் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஈமச் சடங்குக்கு கல் நடுகிற பழக்கம் உள்ள புதைகுழிகள் தமிழகத்தின மற்ற இடங்களில் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர், கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. கேரளாவில் மாங்காட்டு அகழாய்வில் கிடைத்துள்ளவற்றைவிட முற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் இப்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்துள்ள தாழிகள் சிவப்பு, நிறத்தில் கூம்பு வடிவத்தில் 3 அடி விட்டமும் சிறிதளவு உயரமும் சொரசொரப்பான அமைப்பும் உடையவை. தாழிகளின் ஓரங்களில் விரல் பதிந்த வேலைப் பாடுகளும் ஆழமான முக்கோண வடிவப் புள்ளிகளும் காணப்படுகின்றன. தட்டையான கூம்பு வடிவ மூடிகள் உள்ளன. ஈமத்தாழிகளின் உள்ளே கறுப்பு, சிவப்பு நிற மட்பானைகள் காணப்படுகின்றன. சில தாழிகளின் உட்புறத்தில் ஆணி போன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருக்கிறது. இது உட்புறம் பொருட்களை தொங்கவிடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பெரும்பாலான தாழிகளில் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் பகுதிகள் மட்டும்தான் காணப்படுகிறது. இந்த எலும்புகூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக் கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகிறது.
வெண்கலப் பொருட்கள் சிறந்த வேலைப்பாடுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. வாள், கத்தி, உளி போன்ற இரும்புச் சாமான்களும் பெருமளவில் காணப்படுகின்றன. பானையின் வெளிப்புறத்தில் மென்புடைப்பு சிற்பமாக பெண் உருவமும் மான், பறவை மற்றும் செடிகளும் உள்ளன. புடைப்பு சிற்ப பெண் உருவங்கள் தாய் தெய்வமாகக் கருதப்படுகின்றன. மேலும் வனப் பகுதியாக இருப்பதால் வள்ளிக் குறத்தியாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. புடைப்பு சிற்பத்தின் வரி வடிவம் சிந்து சமவெளி பானை ஓடுகளில் காணப்படும் சிற்ப வரி வடிவ ஓவியங்களுக்கு நிகராக உள்ளன. இதுவும் கிடைக்கப்பெற்றுள்ள பானைகளின் வகைகளும் ஆதிச்சநல்லூர் கலாச்சாரத்தின் தொழில் நுட்ப மேலாண்மையைக் காட்டுவதாக உள்ளன.” என்கிறார் சத்தியமூர்த்தி. மேலும் வெண்புள்ளி அலங்கார வேலைப்பாடுகளும் பானை மேல் தீட்டப்பட்டுள்ளன. இது அக்கால படைப்பாளியின் அழகியல் மற்றும் படைப்புத்திறன் நேர்த்தியையும் மக்களின் ரசனையையும் காட்டுவதாக உள்ளது.
பொதுவாக மட்பாண்டங்கள், தாழி, கிண்ணம், தட்டு, நீண்ட கழுத்துடைய ஜாடி, மூடி, சிறிய பானைகள், பானை தாங்கும் நாற்காலிகள், வட்டிகள் போன்றவை மூன்று கால நிலைகளிலும் கிடைத்துள்ளன. ஆரம்ப கால மட்பாண்டங்கள் சிறப்பாகவும் நன்கு சுடப்பட்டவையாகவும் உள்ளன. பிற்காலங்களில் உள்ளவற்றில் இது காணப்படவில்லை. மூன்று அடுக்குகளிலும் ஈமச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவை வண்ணங்கள், உள்ளடக்கம், மற்றும் அமைப்பியல் வகைகளில் மாறுபட்டு உள்ளன. புதைக்கும் விதத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் வேறுபாடுகள் உள்ளன. உடலை அப்படியே கட்டி நிற்கும் நிலையில் தாழிக்குள் வைத்து புதைத்துள்ளார்கள்.
”அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் கிடைத்துள்ளதால் பக்கத்திலேயே மனிதர்களின் வாழிடங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக அது தாமிரபரணிக்கு இந்தப் பக்கம் இருக்கலாம். இந்த வருடம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் திட்டத்துடன் இருக்கிறோம். தாமிரபரணி பாதை மாறியுள்ளது. எனவே முதலில் அதன் பழைய பாதையை கண்டறிய வேண்டும். கி டைத்துள்ள மண் பாண்டங்கள் மணிப்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப் பட்டுள்ளன. அதன் முடிவு தெரியவரும்போது அதன் கலாச்சாரத்தின் காலத்தை அறிய முடியும். மேலும் அடக்ககுழியை தோண்டும் முறையையும் மூடும் முறையையும் அறிய முடியும். அது அச் சமூகத்தின் ஈமச்சடங்குகளையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துமாறு இருக்கும்” என்கிறார் சத்தியமூர்த்தி.
நன்றி: தீராநதி